தண்ணீர் தட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் தட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:48 PM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதில் பேச்சுலர்களின் கோட்டையான திருவல்லிக்கேணியில் பல மேன்சன்கள் மூடப்பட்டு வருகின்றன.

தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சில தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 316 விவசாய கிணறுகளில் இருந்து தினமும் 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.


இதற்காக 1,000 லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் கொடுக்கப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், ''இயற்கை பொய்த்துவிட்டதால்தான் இந்தாண்டு வறட்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்னையை சமாளிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஏதோ ஓர் இடத்தில் நடைபெறும் ஓரிரு சம்பவங்களை மட்டுமே வைத்து, தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் இருப்பதை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்’’.குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வது தொடர்பாக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். காணொலிக்காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை, மாற்றுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தண்ணீர் தட்டுப்பாடு குறித்து சென்னை பெருநகர குடிநீர் வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க என்ன செய்தீர்கள்? ஏரிகள் வறண்டதால் சென்னைக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு என்ன செய்தீர்கள்? என அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கடைசி நேரத்தில் மழை நீர் சேகரிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி என்ன பலன் எனவும் வினா எழுப்பிய நீதிபதிகள், நீர் மேலாண்மைக்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் மற்றும் தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... குடிநீர் பஞ்சம் - மாயத்தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்: முதல்வர் பழனிசாமி





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading