மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைகழக நுழைவுத் தேர்வு மூலம் மட்டும் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ப்ளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்று மாநில பல்கலைக்கழகங்கள் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க
ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது. மொத்த மாணவர்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான மாணவர்கள் மாநில பாடத் திட்டங்களில் பயின்று வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை பிரிவுகளை சேர்ந்தவர்களாவர்.
எனவே என்சிஇஆர்டி பாடத்திட்ட அடிப்படையில் நுழைவுத்தேர்வு மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதுடன், இந்த நிலை நம் நாட்டில் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை வெகுவாக குறைக்கும்.
இந்நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை. மேலும் மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
இவ்வாறு ஒரு நுழைவுத் தேர்வினை செயல்முறைக்கு கொண்டு வருவதால பள்ளிக்கல்வியோடு பயிற்சி மையங்களையும் நாடும் இளைய மாணவ சமுதாயத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.எனவே மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேருவதற்கு நடத்தவிருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட மத்திய அரசின் இந்த பேரவை வலியுறுத்துகிறது ” என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.