லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் தொடங்க ஒப்பந்தம்!

இங்கிலாந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித் தரத்தின் மேம்பாடுகளை தமிழகத்தில் செயல்படுத்த இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு சென்று பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலையில் அசோக் லைலண்ட் குழும தலைவர் இந்துஜா-வை சந்தித்து பேசினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், முதலமைச்சரின் செயலாளர்கள் செந்தில் குமார், விஜயகுமார் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

சென்னையில் இருந்து நேற்று காலை புறப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் துபாய் வழியாக இரவு 10 மணியளவில் லண்டன் சென்றடைந்தனர்.

இரவு தாஜ் ஹோட்டலில் தங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்தித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் முதலமைச்சருடன் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சர்வதேச மனிதவளமேம்பாட்டு நிறுவனத்தினர் இன்று காலை சந்தித்து பேசினர். அப்போது, முதலமைச்சர் கோட், சூட் அணிந்தபடி புதிய தோற்றத்தில் இருந்தார்.

இந்த சந்திப்பின் போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணித்தர மேம்பாடுகளை அதிகரிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது

இதை தொடர்ந்து, இங்கிலாந்தில் செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சேவை 999 திட்டத்தையும் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

கொசுக்களால் பரவும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவது, நோய்களை கையாளும் வழிமுறைகளை தமிழகத்தில் செயல்படுத்துவது மற்றும் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் தொடங்குவது ஆகிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு சென்று பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலையில் அசோக் லைலண்ட் குழும தலைவர் இந்துஜா-வை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து 3 நாட்கள் லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் 2-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார்.

Also see... கல்வியின் மூலமாகவே பாலியல் கொடுமைகளை தடுக்க முடியும்: த்ரிஷா
Published by:Vaijayanthi S
First published: