இன்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது.
கடந்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற சிறப்பான முன்னோடிக் கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க -
தமிழக பட்ஜெட் 2022 : ''21 இந்திய, உலக மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் வெளியிடப்படும்''
இத்திட்டம் நமதுநாட்டிற்கே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் வாயிலாக 30 இலட்சம் மாணவர்கள்பயனடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றால் பெருமளவில் கல்வி கற்றலில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இத்திட்டம்வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க - தமிழ்நாடு பட்ஜெட் 2022 : உலகத் தரத்தில் அறிவுசார் நகரம், கல்வி நிலையங்களை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு
அரசுப் பள்ளி மாணவர்கள், புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் STEAM - அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில்முன்மாதிரிப் பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது.
வரும் நிதியாண்டில்,மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப்பள்ளிகள் (Model Schools) தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாநிலத்தில் இயங்கி வரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து, மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகள் வழங்க ஓர் உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது.
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில்,36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன்கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். இந்நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.
சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சிகள் நடத்தப்படும்.
இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். புத்தகக்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.
இம்மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.