TN Budget 2021| புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள்.. காசிமேடு துறைமுகம் மேம்பாட்டுக்கு 150 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்

தமிழக பட்ஜெட்

தரங்கம்பாடி, திருவொற்றியூர், அழகன்குப்பம் மற்றும் ஆற்காட்டுத்துறையில் மீன்பிடித் துறைமுகத் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

  • Share this:
    தமிழகத்தில் புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க மொத்தம் 6.25 கோடி ரூபாய் செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

    தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2021 - 2022ஆம் ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசியவர், “ தமிழ்நாடு நீண்ட கடலோர பகுதியையும், பெரிய மீனவர் சமூகத்தையும் கொண்ட மாநிலமாகும், 6000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புடன் கடல் மீன் உற்பத்தியில் தற்போது தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதிக்காகவும், சிறப்பு நிதிக்காகவும் கடல்சார் மீனவருக்கான சேமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்திற்காகவும் மொத்த தொகையாக 303.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடி இழுவைப் படகுகளிலிருந்து செவுள் வலை மற்றும் இழுவை வலை அமைப்புகளுக்கு படகுகளை மாற்றியமைப்பதற்கு பன்முகத் தன்மைக்கான சிறப்புத் திட்டத்தை இந்த அரசு விரைவுப்படுத்தும், கடல்பாசி வளர்ப்பு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு மற்றும் கடல் வாழ் உயிரின வளர்ப்பு உள்ளிட்ட மாற்று வாழ்வாதாரத் திட்டங்களும் ஊக்குவிக்கப்படும்.

    தரங்கம்பாடி, திருவொற்றியூர், அழகன்குப்பம் மற்றும் ஆற்காட்டுத்துறையில் மீன்பிடித் துறைமுகத் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை விரைந்து நிறைவு செய்யப்படும். புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க மொத்தம் 6.25 கோடி ரூபாய் செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். சென்னை துறைமுகப்பொறுப்புக் கழகத்துடன் இணைந்து, சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மொத்தம் 150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.” என்றார்.
    Published by:Ramprasath H
    First published: