குடியரசு தினம் கடந்தாலும் குடியரசு தின அலங்கார ஊர்தி சர்ச்சை முடிவுக்கு வராது என்பது போல மத்திய - மாநில ஆளும் தரப்பினருக்கு இடையே நீடித்து வரும் ஊர்தி தொடர்பான மோதல்கள் நீண்டுகொண்டே செல்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெரும் குடியரசு தின விழா அணிவகுப்புக்கு, மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தின் கலாச்சாரம், வரலாற்றை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்த்திகளை தயார் செய்து அனுப்பிவைப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்காக தமிழக அரசு சார்பில் வ.உ.சி, பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி முன்மொழிவு ஒன்று மத்திய பாதுகாப்புத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சில காரணங்களுக்காக இந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக மாறியது. தமிழக வரலாற்று நாயகர்களை அவமதிக்கும் செயல் இது என்று பல்வேறு தரப்பினர் மத்திய அரசை கண்டித்த நிலையில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஊர்திகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைக்கப்ப்பட்டிருப்பதாக விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை மையப்படுத்தி அரசியலில் ஈடுபட வேண்டாம் என பாஜக தலைவர்களும் பேசினர்.
Also read: பத்ம விருதுக்காக குலாம் நபி ஆசாத்தை கலாய்த்த சக காங்கிரஸ் தலைவர்..
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அந்த ஊர்தி அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது.
இதனிடையே இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா, குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டதாக ஒரு ஊர்தியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இந்த சுதந்திரப் போராட்ட வீரர் யார்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
2013ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் நடத்தப்பட்ட குடியரசு தின விழாவில் பங்கேற்ற கர்நாடக மாநில அலங்கார ஊர்தி குறித்த புகைப்படத்தை திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா தற்போது பொய்யாக பரப்பி வருவதாக, பதிலடி தந்துள்ள பாஜக மாநில சமூக ஊடகப் பிரிவின் தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், தனது ட்வீட்டில் அது தொடர்பான செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்து திமுக எம்.எல்.ஏவை கண்டித்துள்ளார்.

CTR Nirmal kumar
குடியரசு தினம் முடிந்தாலும், குடியரசு தின அலங்கார ஊர்தி குறித்த சர்ச்சை, திமுக, பாஜகவினரிடயே தொடர்ந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.