காகிதமில்லா தமிழக சட்டசபை... பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார் சபாநாயகர்...!

தனபால். (கோப்புப் படம்)

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை
டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் குறித்து ‘இ-விதான்’ திட்டத்துக்கான 2 நாள்கள் பயிற்சி வகுப்பை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தொடங்கி வைத்தார்.

பாரம்பரியமிக்க தமிழக சட்டப் பேரவையின் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கும் ‘இ-விதான்’ திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகளின் நடவடிக்கைகளை காகிதம் இல்லாத வகையில் மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தேசிய ‘இ-விதான்’ என்ற திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவையிலும் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் பேரவை மின் ஆளுமை (இ-விதான்) திட்டத்தைச் செயல்படுத்த ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பேரவையின் கூடுதல் செயலாளா் அந்தஸ்திலானவா் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு டெல்லியில் ஏற்கெனவே பேரவை மின்ஆளுமைத் திட்டம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாநில சட்டப் பேரவையில் உள்ள இதர அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கும் பேரவை மின் ஆளுமைத் திட்டம் குறித்து பயிற்சி அளிக்க டெல்லியில் இருந்து உயரதிகாரிகள் சென்னை வந்துள்ளனா்.

இன்றும் நாளையும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. பேரவை மின் ஆளுமைத் திட்டம் மூலமாக, பேரவையின் அனைத்து நடவடிக்கைகளும் காகிதம் இல்லாமல் மாற்றப்படும்.

கோப்புகளில் இருந்து தொடங்கி சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு அளிக்கப்படும் ஆவணங்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் வடிவிலேயே இருக்கும். அதாவது மின்னஞ்சல் அல்லது செயலி வழியாக அனுப்பப்படும்.

சட்டப்பேரவை மின்ஆளுமைத் திட்டத்தின் மூலம், பாரம்பரியமிக்க சட்டப்பேரவை மண்டபமும் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. பேரவை மண்டபத்தில் மிகப்பெரிய டிஜிட்டல் திரைகள், ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கைக்கு முன்பாக தொடு திரை வசதியுடன் கூடிய திரைகள், கையடக்கக் கணினி என பல்வேறு வசதிகள் பேரவை உறுப்பினா்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட உள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இ-விதான் திட்டம் நடைமுறைக்கு வந்ததும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கப்பட வேண்டிய தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் வழியில் அளிக்கப்படும். இ-விதான் இணையதளத்திலும் நாடாளுமன்றம், டெல்லி மேல்- சபை உள்பட அனைத்து சட்டமன்றங்களும் இணைக்கப்பட்டு இருக்கும்.

அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாக லாக்-இன் செய்து கொள்ள முடியும். அந்த லாக்-இன்-ல் அவர்களுக்கு சட்டசபை செயலகம் மூலம் தகவல்கள், நோட்டீஸ்கள், சட்டசபை நிகழ்ச்சிகள் அளிக்கப்படும். அவர்களும் அந்த தளத்தின் வழியாகவே பதிலளிக்க வேண்டும்.

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சபாநாயகர் முடிவு செய்தால், அதையும் இ-விதான் வழியாக ஒளிபரப்பு செய்யலாம். தற்போது இமாசல பிரதேச சட்டசபை முழுமையாக இ-விதான் திட்டத்தை செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடதக்கது.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: