சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: கலைவாணர் அரங்கில் முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு

கலைவாணர் அரங்கம்

கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.

    16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கும். ஆளுநர் உரையில் இடம்பெறப்போகும் முக்கிய அம்சங்கள் என்னென்ன? புதிய அரசு அறிவிக்கப் போகும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த ஆவல் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையில், திமுக தலைமையிலான அரசு அடுத்தடுத்து செய்யப்போகும் திட்டங்கள் என்னென்ன? புதிய அரசினுடைய செயல்பாடுகள் தற்போது வரை அரசு செய்துள்ள சாதனைகள், புதிய அரசு பொறுப்பேற்ற உடன் அறிவித்த திட்டங்கள் குறித்தும், இனி செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாகவும் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கும்.

    குறிப்பாக புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இலவச பயணம், கொரோனா சிறப்பு நிவாரணம், சென்னையில் அமைய உள்ள பல்நோக்கு மருத்துவமனை மதுரை நூலகம் குறித்து ஆளுநர் உரையில் இடம் பெற வாய்ப்புள்ளது. தமிழக ஆளுநரின் ஆங்கில உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் உரையாற்றுவார்.

    சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருக்கைகள் ஒதுக்கீடு என்பது முக்கியமான ஒன்று. சென்னை ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் இருக்கைக்கு வலது புறத்தில் முதல்வருக்கு சிறப்பு இருக்கை இருக்கும். அதேபோல, இடதுபுறத்தில் எதிர்கட்சித் தலைவருக்கு இருக்கை இருக்கும்.

    இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ள கலைவாணர் அரங்கில் பேரவை போன்று வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சபாநாயகர் இருக்கைக்கு இடதுபுறம் முதல் வரிசையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் காங்கிரஸ், பாமக, பாஜக,விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழகவாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சி தலைவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்தடுத்த வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சபாநாயகர் இருக்கைக்கு வலது புறம் முதலமைச்சர் மற்றும் முதல் வரிசையில் அமைச்சர்களுக்கு இருக்கைகளும் மற்றும் பின் வரிசையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அகர வரிசைப்படி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: