மே.7ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; தலைமைக் கழகம் அறிவிப்பு!

ஓபிஎஸ்- இபிஎஸ்

தமிழகத்தில் 1996-க்கு பின் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. அதிமுக தேர்தலில் தோல்வியடைந்தாலும் எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.

 • Share this:
  அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும் என்றே கணித்திருந்தன. அதன்படி, நேற்று 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தொடக்கம் முதலே திமுக கூட்டணி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதிமுக கூட்டணி 80 தொகுதிகளை கூட கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

  தொடர்ந்து தேர்தல் முடிவுகளின் படி, தமிழகத்தில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் 1996-க்கு பின் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. அதிமுக ஆட்சியை இழந்தாலும் 65 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

  இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 7ம் தேதி நடைபெறும் என, அதிமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தலைமைக் கழகத்தில் வரும் 7.05.2021 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

  இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: