Home /News /tamil-nadu /

அண்ணாமலை கிரிமினல்களை எல்லாம் பிடித்து பாஜகவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் - டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்

அண்ணாமலை கிரிமினல்களை எல்லாம் பிடித்து பாஜகவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் - டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்

டி.கே.எஸ்.இளங்கோவன்

டி.கே.எஸ்.இளங்கோவன்

Cuddalore : சிதம்பரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இங்குள்ள கிரிமினல்களை எல்லாம் பிடித்து பாஜகவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

தமிழகத்தில் பாஜக நுழைய முடியவில்லை என்பதற்காக ஆளுநரை பயன்படுத்தி, தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்க நினைக்கிறார்கள் என சிதம்பரத்தில் நடந்த ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ராஜ்யசபா எம்பி டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

கடலூர் கிழக்கு மாவட்டம், சிதம்பரம் நகர திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சிதம்பரம் நகர திமுக செயலாளரும் நகர்மன்றத் தலைவருமான கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பொறியாளர் அணி செயலாளர் துரை.கி.சரவணன், தலைமை கழக பேச்சாளர் வேங்கை சந்திரசேகரன், திமுகவின் செய்தி தொடர்பு செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், நிதி பற்றாக்குறையால் சிக்கியுள்ள அரசு, மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் போது எத்தனை கிரிமினல்களை பிடித்தார் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது இங்கு உள்ள கிரிமினல்களை எல்லாம் பிடித்து பாஜகவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். மக்களுக்காக ஒன்றிய அரசு என்ன செய்தது? இரண்டு ஆண்டு காலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தபோது நிதிநிலை அறிக்கையில் இது மக்களுக்காக திட்டம் என்று எதைச் சொன்னது? என்று கேள்வி எழுப்பினர்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கருப்பு பணத்தை ஒழித்து விட்டோம். வீட்டுக்கு 15 லட்சம் தருவதாக சொன்னார்கள். அது என்ன ஆனது? எங்களது வளர்ச்சி குஜராத் மாடல் வளர்ச்சி என்று சொன்னார். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி அங்கு வந்தபோது சில பகுதிகளை பார்க்க கூடாது என்பதற்காக சுவர் அமைத்தார்கள். யாரைப் பாதுகாக்க வேண்டுமோ அவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசு தவறி விட்டது.

பசுவைப் பாதுகாக்கிறார்கள். சமஸ்கிருதம், இந்து மதம் போன்றவற்றை பாதுகாக்கிறார்கள். குஜராத்தில் இரண்டு பணக்காரர்களை பாதுகாக்கிறார்கள். மக்களை பாதுகாக்காமல் நடுத்தெருவில் விட்டு விட்டார்கள். இந்த சூழலில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு நம் தலைவர் மு.க.ஸ்டாலினால்தான் காரணம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய இளங்கோவன், நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த 4 மாதத்தில் நகையை வைக்காமல் அதிமுககாரர்கள் பல கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள். போலி நகையை வைத்தும் நகைக்கடன் வாங்கி இருக்கிறார்கள். இப்படி செய்தால் திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியும்.

ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒன்றிய அரசு வரியை வசூலித்துக் கொண்டு நமக்கு அதில் பங்கை கொடுக்கிறது. அதை கேட்பதற்கு நாம் பலமுறை கடிதம் எழுத வேண்டும். அமைச்சர்களை அனுப்ப வேண்டும். அப்போது கூட 4 ஆயிரம் கோடி கொடுக்க வேண்டிய இடத்தில் 400 கோடி ரூபாய் கொடுத்து விட்டு, நிதியை கொடுத்து விட்டேன் என்று கூறுவார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளன. அதில் உச்சகட்டமாக பழனிச்சாமி மீது அவரை வளர்த்து ஆளாக்கி உருவாக்கிய ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளை அடிக்க ஆள் அனுப்பினார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலக்கரியை வழங்கவில்லை என்பதால் தான் மின்தடை ஏற்படுகிறது. அதானி தோண்டி எடுக்கும் நிலக்கரி இந்தியா வந்த பிறகுதான் நிலக்கரி கிடைக்கும். பாஜக எம்.பி.க்கள் பதவி ஏற்கும்போது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவேன் என்று கடவுளறிய உறுதிமொழி ஏற்றீர்கள். ஆனால் இப்போது அதை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களை ஏமாற்றுவது மட்டுமல்லாமல் கடவுளையும் ஏமாற்றுகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மீறி எல்லா செயல்களையும் செய்கிறார்கள். எல்லாவற்றிலும் தில்லுமுல்லு.

நீட் தேர்வை அதனால்தான் எதிர்க்கிறோம். சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும்தான் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உண்டு. மற்ற யாருக்கும் கிடையாது. குடியரசுத் தலைவருக்கு கூட அவசர சட்டம் நிறைவேற்றுவதற்குதான் அதிகாரமுண்டு. அதற்கும் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அவர் அதை ஓராண்டு காலத்திற்கு வைத்து விட்டு பின்னர் மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்புகிறார்.

Must Read : சிபிஐ சோதனை.. எத்தனை முறைதான் நடத்துவார்கள்: கார்த்தி சிதம்பரம் ட்விட்

அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர் என்பது ஒரு அலங்காரப் பதவி. ஆனால் ஆளுநர் என்ன சொல்கிறார். அரசமைப்பு சட்டத்தை மீறி சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதை திருப்பி அனுப்பலாம். ஆனால் இது ஏழை மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய திட்டம். அதனால் திருப்பி அனுப்புகிறேன் என நீட் மசோதாவை திருப்பி அனுப்புகிறார். இதை பற்றி யார் அவரிடம் கருத்து கேட்டது?

அமைச்சரவையின் ஆலோசனையை பெற்றுதான் ஆளுநர் நடக்க வேண்டும். இதுதான் அவருக்கு உள்ள அதிகாரம். அமைச்சரவையையும் கேட்பதில்லை. சட்டமன்றம் சொல்வதையும் கேட்காமல் இவர் தனியாக ஒரு ஆட்சி நடத்துகிறார். ஏனென்றால் பாஜக இங்கு நுழைய முடியவில்லை. அதனால் ஆளுநரை பயன்படுத்தி இந்த அரசின் செயல்பாடுகளை முடக்க நினைக்கிறார்கள்.

மாநிலத்தில் உள்ள திமுக அரசு மக்களின் அரசு. ஒன்றியத்தில் உள்ள பாஜக அரசு 2 பணக்காரர்களின் அரசு. மக்களுக்காக பாடுபடும் மக்கள் நல அரசு தமிழகத்தில் உள்ள திமுக அரசு என டி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.
Published by:Suresh V
First published:

Tags: Annamalai, Cuddalore, DMK, MK Stalin, RN Ravi

அடுத்த செய்தி