• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நில பத்திரங்களை நூதன முறையில் அடமானம் வைத்து மோசடி - சொந்த கிராம மக்களை ஏமாற்றிய நபர் தலைமறைவு

நில பத்திரங்களை நூதன முறையில் அடமானம் வைத்து மோசடி - சொந்த கிராம மக்களை ஏமாற்றிய நபர் தலைமறைவு

ராமகிருஷ்ணன்

ராமகிருஷ்ணன்

திருவாரூரில் சொந்த கிராம மக்களின் நில பத்திரங்களை நூதன முறையில் அடமானம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் தலைமறைவு. 

  • Share this:
திருவாரூரில் சொந்த கிராம மக்களின் நில பத்திரங்களை நூதன முறையில் அடமானம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் தலைமறைவு.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த வடுவூர் வடபாதி மற்றும் தென்பாதி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் வடுவூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்று உயிரிழந்த அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தியின் மகன் ராமகிருஷ்ணன் என்பவர் சொந்த கிராம மக்களின் நில பத்திரங்களை நூதன முறையில் அடமானம் வைத்து மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

2014 ஆம் ஆண்டு முதல் வடுவூர் தென்பாதி கிராமத்தை செந்தமிழ்ச்செல்வி என்பவர் தனக்கு 5 லட்ச ரூபாய் விவசாய கடன் பெற்றுத் தருமாறு ராமகிருஷ்ணனை அணுகியுள்ளார். அவர் தஞ்சாவூரில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் தனது நண்பர் மேலாளராக பணியாற்றுவதாக கூறி உத்தரவாதத்திற்காக நிலப்பத்திரத்தை எடுத்துவர கூறியுள்ளார். வங்கி மேலாளர் உதவியுடன் 25 லட்ச ரூபாய் அளவிற்கு நில பத்திரத்தை அடமானம் வைத்துப் பணம் பெற்றுள்ளார். இதனைக் கேட்டபோது 5 லட்ச ரூபாய்க்கான வட்டி மற்றும் அசல் கடனை மட்டும் செலுத்துமாறு ராமகிருஷ்ணன் செந்தமிழ்ச்செல்வியிடம் தெரிவித்துள்ளார்.

இதேபோல வடுவூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் முத்துக்குமார், பழனி பிரகாஷ், ராஜேந்திரன், சங்கீதா உள்ளிட்ட பலர் ராமகிருஷ்ணனை விவசாயக்கடன் மற்றும் மருத்துவ கடன் ஆகிய கடன்களுக்காக அணுகியுள்ளனர். அவரும் கிராம மக்கள் கேட்ட தொகைக்கு அதிகமாக பத்திரங்களை அடமானம் வைத்து தஞ்சாவூர் ஆக்சிஸ் வங்கி, கோகுலம் பைனான்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனம் போன்ற வங்கிகளில் கூடுதலாக பணம் பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக பத்திரங்களை கொடுத்த கிராம மக்கள் ராமகிருஷ்ணனை கேட்டபோது தாங்கள் வாங்கிய கடனுக்கு மட்டும் வட்டியும் அசலும் செலுத்துமாறு தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது கடன் தொகை முழுமையாக செலுத்தவில்லை என வங்கியில் இருந்தும் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்தும் நிலங்களையும் வீட்டுமனைகளையும் ஜப்தி செய்யப் போவதாக வங்கி அதிகாரிகள் தொடர்ந்து கிராம மக்களை தொல்லை கொடுத்து வருகின்றனர்.

ராமகிருஷ்ணன் மீது ஏற்கனவே தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வடுவூர் காவல் நிலையத்திலும் ராமகிருஷ்ணன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வங்கி அதிகாரிகள் கிராம மக்களை நிலத்தை ஜப்தி செய்வதாக அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் ராமகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

சொந்த கிராமத்தை சேர்ந்தவர் என்ற நம்பிக்கையிலும் அக்கம் பக்கத்து வீட்டார் என்ற நம்பிக்கையிலும் நிலப்பத்திரத்தையும் வீட்டுமனை பத்திரத்தையும் அடமானம் வைத்த உரிமையாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். மேலும் தலைமறைவாகி உள்ள ராமகிருஷ்ணனை தேடும் பணியில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இந்த நூதன மோசடிக்கு உறுதுணையாக இருந்த வங்கி மேலாளர்கள் பணியிட மாற்றம் பெற்று வேறு ஊர்களுக்கு சென்று விட்டதாகவும் பணியை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட்டதாகவும் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. சொந்த கிராம மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நபர் குறித்து திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: