திருவாரூரில் கனமழையின் காரணமாக பயிறு உளுந்து செடியிலேயே முளைத்ததால் ஏக்கருக்கு 10,000 செலவு செய்தும் ஒரு ரூபாய் கூட கிடைக்காத நிலையில் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 345 ஏக்கர் பரப்பளவில் கோடைக்கால சாகுபடியாக செய்யப்படும் மானாவரி பயிர்களான பயிறு, உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவடை பணிகள் தற்போது மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தற்போது 50 சதவீதம் அளவில் பயிறு உளுந்து அறுவடை பணிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு கனமழை என்பது பெய்து வந்தது. குறிப்பாக அறுவடைக்காக பறிக்கப்பட்ட பச்சை பயிறு வகை செடிகள் மழையின் காரணமாக வயலிலேயே மூடி வைக்கப் பட்டிருந்தன. இவற்றில் பாதி அழுகியும் , மீதம் செடியிலேயே முளைத்தும் காணப்படுவதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் குலமாணிக்கம் குருவாடி , பள்ளி வர்த்தி , வீராக்கி , சேந்தமங்கலம் , காரியமங்கலம் , விக்கிரபாண்டியம் , காணுர் , கள்ளிக்குடி ஆகிய கிராமங்களில் பச்சைப் பயறு சாகுபடி கனமழையின் காரணமாக முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது . மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர், உளுந்து வகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த பச்சை பயிர் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்வதாகவும் , குவிண்டால் ஒன்று 6,500 விலை போவதாகவும் ஏக்கருக்கு 3 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் கனமழையின் காரணமாக பயிறு உளுந்து சாகுபடி பணிகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் செடியிலேயே பயிறு முளைத்தும் காணப்படுவதால் செலவு செய்த அசல் தொகையை கூட எடுக்க முடியாத சூழ்நிலையில் சிக்கித் தவிப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும் பயிர் வகைகளுக்கு இன்சூரன்ஸ் இருப்பினும் சென்ற வருடம் இன்சூரன்ஸ் தொகை கட்டியதற்கு இன்று வரை இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த ஆண்டாவது வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கிட ஆவன செய்ய வேண்டுமென விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்தியாளர் : செந்தில்குமரன் , திருவாரூர் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.