முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஓடிச்சென்று மனுக்கொடுத்த அமமுக பிரமுகர் - கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்பிக்கை

முதலமைச்சர் ஸ்டாலினிடம் மனுக்கொடுத்த அமமுக பிரமுகர்

காரில் சென்ற முதலமைச்சருக்கு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • Share this:
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.காட்டூரில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.இன்று, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு & குழந்தைகள் நல சிகிச்சை மையம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

திருவாரூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்தார். திருச்சியில் இருந்து காரில் திருவாரூர் சென்றார். காரில் சென்ற முதலமைச்சருக்கு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் இருந்தபடியே பொது மக்களின் கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.

திருவாரூர் மாவட்ட எல்லையாக இருக்கும் வடுவூர் கிராமத்தில் திமுகவினர், பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று வாழ்த்தி முழக்கமிட்டனர். பொது மக்கள் பார்க்கும் வகையில் முதலமைச்சரின் கார் மெல்ல சென்று கொண்டிருந்தது. அப்போது வடுவூர் கடைத்தெரு பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்த அமமுக திருவாரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் VGP ராவணன் திடீரென முதலமைச்சரின் காண்வாய் நோக்கி ஓடினார். தன் கையில் வைத்திருந்த கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார். முதலமைச்சரும் பெற்றுக் கொண்டு, மனுவை உதவியாளரிடம் அளித்தார்.

அந்த மனுவில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து வடுவூர் ஒன்றியம் அமைக்க வேண்டும். இதை தஞ்சாவூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் எங்க ஊர் வடுவூர் இருந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட போது முதலில் நாகை, அதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால், எங்கள் ஊருக்கு அருகில் 22 கி.மீ தூரத்தில் தஞ்சாவூர் உள்ளது. மக்கள் அரசு சார்ந்த தேவைகளுக்கு 40 கி.மீக்கு மேல் தூரத்தில் உள்ள திருவாரூர் செல்ல வேண்டியுள்ளது. எனவே எங்கள் பகுதிகளை மீண்டும் தஞ்சாவூர் மாவட்டத்தோடு இணைக்க வேண்டும். ஆகையால்,  பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைக்காக கட்சி பார்க்காமல், முதலமைச்சரை சந்தித்து மனு கொடுத்தேன்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வடுவூர் உள்ளிட்ட 17 கிராம ஊராட்களில் 2001ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். முதலமைச்சருக்கும் அனுப்பினோம். தற்போது மீண்டும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.  நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம் என்றார்.
முதலமைச்சரிடன் மனு அளித்த ராவணனின் தாத்தா,  முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க மூத்த தலைவர்களோடு நெருக்கமாக பழகியவர். ராவணன் மனைவி இளவேணி அமமுக மாவட்ட மகளிரணிச் செயலாளராக உள்ளார். இவர், வடுவூர் வடபாதி ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.

வடுவூரைத் தொடர்ந்து அருகில் உள்ள செருமங்கலம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய தொழிலாளர்கள், விவசாயிகளையும் சந்தித்தார். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏக்கள் உதயநிதி, பூண்டி கலைவாணன், டிஆர்பி. ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: