ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு செல்லும் சாமானியன்!

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு செல்லும் சாமானியன்!

மாரிமுத்து

மாரிமுத்து

இவர் தாய், தந்தையர் உள்ளிட்ட குடும்பத்திலுள்ள அனைவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள்தான். இன்றளவும் இவரது மனைவி ஜெயசுதா விவசாய கூலி வேலைக்கு சென்று சம்பாதித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்து தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு தொகுதி தனித் தொகுதியான திருத்துறைப்பூண்டி தொகுதியும் அடக்கம்.

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் யார் என்பது குறித்து தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட அன்றிலிருந்து அப்பகுதி மக்களிடையே பெரும் பேசுபொருளாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் பலரும் ஆதரித்து கூறிய பெயர் கோட்டூர் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து.

மாரிமுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். கடந்த 13 ஆண்டு காலமாக கோட்டூர் ஒன்றியச் செயலாளராக உள்ளார். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன. அந்த போராட்டங்களை கோட்டூர் ஒன்றியச் செயலாளராக இருந்து ஒருங்கிணைத்து முன்னின்று நடத்துவார் மாரிமுத்து.

வெற்றி பெற்ற மாரிமுத்து

இவர் கோட்டூர் ஒன்றியம் காடுவாகுடி கிராமத்தை சேர்ந்த கண்ணு& - தங்கம்மாள் தம்பதியரின் மகனாவார். தற்போது மாரிமுத்துவிற்கு 49 வயதாகிறது. இவர் தாய், தந்தையர் உள்ளிட்ட குடும்பத்திலுள்ள அனைவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள்தான். இன்றளவும் இவரது மனைவி ஜெயசுதா விவசாய கூலி வேலைக்கு சென்று சம்பாதித்து வருகிறார். மாரிமுத்துவிற்கு ஜெயவர்மன் என்ற மகனும் ஜெய தென்றல் என்ற மகளும் உள்ளனர்.  இவர் தொடர்ச்சியாக கட்சிப் பணியாற்றினாலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அடையாளமாக சொல்லப்பட்டு வருகின்ற மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு போன்றே இவரும் யாரிடமும் அதிர்ந்து பேசாத குணமுடையவர். வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பணிவாக பழகுவதும், அன்பு காட்டுவதும் இவரது குணாம்சம் என அவரை அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது அதில் தனது வங்கிக் கணக்கில்  ரூ 58,000 (கட்சியின் பணம்)  மனைவியிடம் சேமிப்பு ரூபாய் ஆயிரம், 3 பவுன் தங்கச் செயின் 66 சென்ட் நிலம் உட்பட சுமார் ரூபாய் மூன்று லட்சத்துக்கு இவரது சொத்து மதிப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வங்கி கணக்குகள் ஓரிரு ஆண்டுகளுக்குள் தொடங்கியதுதான். பி.காம் பட்டதாரியான மாரிமுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து வெற்றி பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மாரிமுத்து 97,092 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 67024 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதன் காரணமாக 30,068 பெருவாரியான வாக்குகள் பெற்று மாரிமுத்து வெற்றி பெற்று மக்கள் சேவையும், கடின உழைப்பும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலன் மீது அக்கறை கொண்ட எந்த ஒரு சாமானியனும் சட்டமன்றத்திற்கு செல்லமுடியும் என நிரூபித்துள்ளார்.

Published by:Esakki Raja
First published:

Tags: CPI, Election Result, Thiruvarur, TN Assembly, TN Assembly Election 2021