விபத்து போல் சித்தரித்து இளம்பெண் படுகொலை: நான்கு பேர் கைது!

கைது

ஜெயபாரதி வேலைக்கு செல்லும் பொழுது விபத்து ஏற்படுத்திய வாகனம் அவரை பின் தொடர்ந்து சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே திட்டமிட்டு ஜெயபாரதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது

 • Share this:
  திருவாரூரில் விபத்து போல் சித்தரித்து இளம்பெண்  படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

  திருவாரூர் அடுத்த கடாரம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர்  சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதிக்கும், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு ஜெயபாரதியும் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாவிற்கு தனது கணவருடன் சென்று விட்டார்ர். அவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

  இதனிடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இருவருக்குமிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் ஜெயபாரதியையும், குழந்தையையும் திருவாரூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கே விஷ்ணு பிரகாஷ் அனுப்பிவிட்டார். பலமுறை தனது பெண்ணை கணவனுடன் சேர்த்துவைக்க ஜெயபாரதியின் பெற்றோர் முயற்சித்தும்  பலனளிக்கவில்லை. இதையடுத்து,  கும்பகோணம் மகளிர் காவல்நிலையத்திலும், முதலமைச்சர் தனி பிரிவுக்கும், சமூக நலத்துறைக்கும் புகார் அளித்தனர்.  பின்னர்,  ஜெயபாரதி விவகாரத்து கேட்டு கணவர் விஷ்ணு பிரகாஷ்க்கு நோட்டீஸ் அனுப்பினார்.

  இந்த பிரச்சனையால் தனது வேலைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அமெரிக்காவில் பணியாற்ற முடியாது என்றும் அஞ்சிய  விஷ்ணு பிரகாஷ், விவாகரத்து நோட்டீஸை திரும்பப் பெறும்படி  ஜெயபாரதி மற்றும் அவரது  பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். இதனிடையே ஜெயபாரதிக்கு தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை கிடைக்கவே தப்பளாம்புலியூர் கிராமத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.

  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஜெபாரதி பணி முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு வரும்  வாகனம் மோதி உயிரிழந்தார்.  மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்ததையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.  விபத்து ஏற்படுத்திய வாகனம் திருவாரூர் அடுத்த பவித்திமாணிக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமானதாகும்., அதை இருதினங்களுக்கு முன்பு கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த ராஜா என்பவர் வாங்கி சென்றுள்ளார்.

  மேலும் அன்று காலை ஜெயபாரதி வேலைக்கு செல்லும் பொழுது விபத்து ஏற்படுத்திய வாகனம் அவரை பின் தொடர்ந்து சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே திட்டமிட்டு ஜெயபாரதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் வாகனத்தை விற்பதற்கு உதவியாக இருந்த ஜெகனை பிடித்து விசாரித்ததில் ஜெயபாரதியை வாகனத்தை விட்டு மோத சொன்னதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

  தொடர்ந்து ஜெகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் ஜெகன் அளித்த தகவலின் பேரில் நான்கு சக்கர வாகனத்தின் உரிமையாளரான பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், வாகனத்தை ஓட்டிவந்த கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த பிரசண்ணா, உதவியாக இருந்த ராஜா ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  மேலும் ஜெயபாரதியின் கணவரின் உறவினர்கள் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கைதானவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து போல சித்தரித்து இளம்பெண்ணை திட்டமிட்டு படுகொலை செய்துள்ள திருவாரூர் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: