தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் வழங்கப்பட்டது தொடர்பாக எழுந்த புகாரில் அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றும் அறிக்கை சமர்ப்பித்த பின் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஆறாம் கட்ட தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமினை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். காப்பனாமங்கலம், குடவாசல் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி முகாம்கள் ஆய்வுசெய்த சுகாதாரத்துறை அமைச்சர் திருவாரூரை அடுத்த கொடிக்கால்பாளையம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் 6-ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மதியம் 1.30 மணி நிலவரப்படி 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் இன்று 500 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தின் இலக்காக 50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் 8 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார துறை சார்ந்த கட்டிடங்கள் புனரமைப்பு பணி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக கூறிய அவர், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் வழங்கப்பட்டது தொடர்பாக எழுந்த புகாரில் அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றும் அறிக்கை சமர்ப்பித்த பின் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இலங்கை கடற்படை தாக்குதலால் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடல் சொந்த ஊரில் அடக்கம்!
தொடர்ந்து பேசிய அவர், தேவையான கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்தில் உள்ளன. அறுபத்தி ஆறு லட்சம் தடுப்பூசிகள் உடன் ஆறாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறோம். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதேபோல அரசு சார்பில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடமும் இதுதொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிகளை மீறக்கூடாது
இந்திய மருத்துவ கழகமும், உலக சுகாதார நிறுவனமும் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டால் தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. எனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது என விதிமுறைகளை பொதுமக்கள் மீறக்கூடாது. விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் படிங்க: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பெரியார் வாசகத்துடன் முற்றுப்புள்ளி: அமைச்சர் செந்தில் பாலாஜி!
எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்கு தீர்வு தடுப்பூசி செலுத்தி கொள்வது மட்டும்தான். சில மாவட்டங்களில் மதுப் பிரியர்கள் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டால் மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுப் பிரியர்கள், அசைவ பிரியர்களும் வேண்டுகோள் வைத்து அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்தப்படாமல் சனிக்கிழமைகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே அவர்களும் சாக்கு சொல்லாமல் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
செய்தியாளர்: செந்தில்குமரன் உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.