கந்துவட்டி தொடர்பாக புகார் வந்தால் குண்டர் சட்டம் பாயும் - திருவாரூர் மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

திருவாரூர் மாவட்ட எஸ்.பி

திருவாரூர் மாவட்டத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பது தொடர்பாக தொடர்ந்து புகார் வந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்

  • Share this:
கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் திருவாரூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக விஜயகுமார் பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பது தொடர்பாக தொடர்ந்து புகார் வந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் அதிகமாக உள்ளதாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க தயங்குவதாகவும் தெரிய வருகிறது. பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக வட்டிக்கு பணம் வாங்கும் ஏழை எளிய மக்கள் அதிக வட்டி கொடுக்க முடியாமலும் குடும்பத்துடன் தற்கொலை முயற்சிக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனை அறிந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனின் வழிகாட்டுதலின் படி தஞ்சாவூர் டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் அறிவுரையின் படியும் திருவாரூர் மாவட்ட எஸ்.பி.விஜயகுமார் கந்துவட்டி நபர்கள் மீது கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், கந்துவட்டி நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் புகார் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் விலாசம் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் முகக் கவசம் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும். மேலும் அரசின் உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் இருப்பவர்கள் மீதும் ஒரே இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூறினால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமை செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள், அதுமட்டுமன்றி புகார் கொடுக்கப்பட்ட பெண்களின் பெயர் மற்றும் விலாசம் முழுவதுமாக பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர் பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் 43 இருசக்கர வாகன ரோந்து பணிகளை காவல்துறையினர் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் மூலம் கிராமப்புறங்களில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் அதனைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் செயல்படுவார்கள் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: