பெண்ணை கொலை செய்துவிட்டு விபத்து போல் சித்தரிப்பு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா- திருவாரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கொலை செய்யப்பட்ட ஜெயபாரதி

ஜெபாரதி பணி முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு வரும் போது நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்து கிடப்பதாக ஜெயபாரதியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.  

  • Share this:
திருவாரூர் அடுத்த தப்பளாம்புலியூர் கிராமத்தில் வாகனம் மோதி பெண் பலி. விபத்து என கருதிய நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அம்பலம்.

திருவாரூர் அடுத்த கடாரம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர்  சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதிக்கும், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். மணமக்கள் இருவரும் திருமண ஆன சில மாதங்களில் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாவிற்கு சென்று விட்டனர். அங்கு ஒரு பெண் குழந்தை பிறந்து தற்போது நான்கு வயதாகிறது.

இதனிடையே கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இருவருக்குமிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் ஜெயபாரதியையும், குழந்தையையும் திருவாரூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கே விஷ்ணு பிரகாஷ் அனுப்பிவிட்டார். பலமுறை தனது பெண்ணை கணவனுடன் சேர்த்துவைக்க ஜெயபாரதியின் பெற்றோர் முயற்சித்தும்  பலனில்லாததால் கும்பகோணம் மகளிர் காவல்நிலையத்திலும், முதலமைச்சர் தனி பிரிவுக்கும், சமூக நலத்துறைக்கும் புகார் அளித்தும் பலன் இல்லாததால் 50 நாட்களுக்கு முன் ஜெயபாரதி விவகாரத்து கேட்டு கணவர் விஷ்ணு பிரகாஷ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Also Read: ஊரடங்கில் மருந்து வாங்க சென்ற இளைஞர்.. போனை பிடுங்கி கன்னத்தில் பளார் விட்ட கலெக்டர் - வைரலாகும் வீடியோ

இந்த பிரச்சனையால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் தனக்கு வேலை போய்விடும் எனவும், உடனடியாக நோட்டீஸை வாபஸ் பெற வேண்டும் என விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயபாரதியையும், அவரது பெற்றோரையும் போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜெயபாரதிக்கு தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை கிடைக்கவே தப்பளாம்புலியூர் கிராமத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஜெபாரதி பணி முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு வரும் போது நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்து கிடப்பதாக ஜெயபாரதியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.  உடனடியாக திருவாரூர் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வாகன  விபத்தில் ஜெயபாரதி இறந்து விட்டதாக வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே ஜெயபாரதியின் விபத்து சாவில் மர்மம் இருப்பதாகவும், இது விபத்தில்லை எனவும் திட்டமிட்டு வாகனத்தை வைத்து ஜெயபாரதி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய விசாரணை நடத்தவேண்டும் என பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். வாகனம் திருவாரூர் அடுத்த பவித்திமாணிக்கம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரின் மைத்துனருக்கு சொந்தமானதாகவும், அதை இருதினங்களுக்கு முன்பு கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த ராஜா என்பவர் வாங்கி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அன்று காலை ஜெயபாரதி வேலைக்கு செல்லும் பொழுது விபத்து ஏற்படுத்திய வாகனம் அவரை பின் தொடர்ந்து சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே திட்டமிட்டு ஜெயபாரதியை கொலை செய்துள்ளதாக போலீசரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் வாகனத்தை ஓட்டி வந்த ஜெகனை பிடித்து விசாரித்ததில் ஜெயபாரதியை வாகனத்தை விட்டு மோத சொன்னதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

விபத்தால் உயிரிழந்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்து தற்போது திட்டமிட்டு வாகனத்தை விட்டு மோதி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது திட்டமிட்ட படுகொலை வழக்காக மாறும் எனவும் காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதால் உயிரிழந்த ஜெயபாரதியின் கணவர் விஷ்ணு பிரகாஷின் தங்கை கணவர் செந்தில் உள்ளிட்ட உறவினர்கள் பலர் சிக்குவார்கள் என தெரிய வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: