திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் திமுகவினர் கமிஷன் கேட்பதாக கூறி டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி பாதுகாப்பு கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 108 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மார்க் கடையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு விற்பனையாகும் தொகையில் ஒரு சதவீதம் தொகையை கமிஷனாக வழங்கவேண்டும் என புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பி.டி அரசக்குமாரின் சகோதரர் எனக் கூறி டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் கமிஷன் கேட்பதாக புகார் தெரிவித்து இன்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மாநில வாணிப கழகம் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள், கமிஷன் கேட்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேரணியாகச் சென்று டாஸ்மாக் மேலாளரைச் சந்தித்து டாஸ்மாக் ஊழியர்கள் புகார் மனு அளித்தனர்.
இதில் டாஸ்மாக் ஊழியர்களிடம் கமிஷன் கேட்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். அதனையடுத்து டாஸ்மாக் ஊழியர்களிடம் மேலாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையின் முடிவில் டாஸ்மாக் ஊழியர்களிடம் கமிஷன் கேட்கும் நபர்கள் மீது டாஸ்மாக் மேலாளர் தலைமையில் ஊழியர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தமிழ்நாடு டாஸ்மாக் வாணிபக் கழக அலுவலகம் முன்பாக டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் ஊழியர் அருள்மணி, திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கில் ஆளுங்கட்சிகாரர்கள் அத்துமீறலால் தொழிலாளர்கள் அனைவரும் இங்கே ஒன்று கூடி உள்ளோம். புதுக்கோட்டை மாவட்ட திமுகவினர், மாவட்டத்தின் பல்வேறு கடைகளில் சென்று கடை ஊழியர்களிடம் உங்கள் கடை விற்பனை தொகை எவ்வளவு. அதில் ஒரு நாள் விற்பனை தொகையை கமிஷனாக தாருங்கள் என கேட்டார்கள். தொழிலாளர்கள் பதறி போய் ஏன் இப்படி கமிஷன் கேட்கின்றீர்கள் என கேட்கும் போது உங்கள் மாவட்ட மேலாளரிடம் நாங்கள் தகவல் சொல்லி விட்டோம் என கூறி பணம் கேட்டார்கள்.
ஆகவே அரசு பொதுத்துறை நிறுவனமான இந்த டாஸ்மாக்கில், ஆளுங்கட்சிகாரர்களின் இந்த அராஜக நடவடிக்கையினால் தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக முதலமைச்சர் இந்த பிரச்னையில் தலையிட்டு எங்கள் நிறுவனம் செயல்பட உத்தரவிட வேண்டும். கடைக்கு வந்து ஒரு நாள் 2 லட்ச ரூபாய்க்கு ஓடினால் 2,000 ரூபாய் கொடுங்கள் என கேட்கின்றனர். இதுவரை டாஸ்மாக் வரலாற்றிலேயே இல்லாத புதிய விதியை இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
தேர்வு அறையில் முறைகேடு நடப்பதை தடுக்கும் சாதனம்.. கோவை உதவி பேராசிரியை கண்டுபிடிப்புக்கு காப்புரிமை
கமிஷன் கேட்டது புதுக்கோட்டை மாவட்டம் திமுக நிர்வாகி அரசகுமார் தம்பி என கூறினார்கள். இவ்வாறாக டாஸ்மாக் ஊழியர் அருள்மணி கூறியுள்ளார்.
செய்தியாளர் : செந்தில்குமரன், திருவாரூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tasmac, Thiruvarur