கொச்சின் துறைமுகம் அருகே டீசல் தீர்ந்துபோய் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 13 மீனவர்களை காப்பாற்ற டீசல் தருவதாகக் கூறி 1,30,000 ரூபாய் பணத்தை சமூக ஆர்வலர் ஒருவரிடம் கூகுள் பேயில் நூதன முறையில் பெற்றுக்கொண்டு கிளம்பிச் சென்ற மும்பை எண்ணெய் கப்பலை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வைத்து மடக்கிய மீஞ்சூர் காவல் துறையினர்.
கேரள மாநிலம் கொச்சின் துறைமுகம் பகுதில் டீசல் இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருந்த விசைப்படகு மீனவர்கள் கொச்சின் துறைமுகத்தில் நங்கூரமிட்டு துறைமுகம் உள்ளே செல்ல காத்திருந்த M.T.Loyalty என்ற ஆயில் டேங்கர் கப்பலிடம் விசைப்படகிற்கு தேவையான டீசல் தந்து உதவுமாறு கேட்டுள்ளனர். கப்பல் மாலுமி செல்போன் எண்ணை கொடுத்து பேசுமாறு கூறியுள்ளனர். மொழிப்பிரச்னை காரணமாக மாலுமிகள் பேசுவது மீனவர்களுக்கு புரியவில்லை. ஆனால் 1,30,000 பணம் வேண்டும் என்பது மட்டும் தெரிந்தது.
Also Read: தேர்தலில் நிற்கும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
இதனையடுத்து சமூக ஆர்வலரும் மீனவ சங்க தலைவருமான கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆன்றோ லெனினை விசைப்படகு மீனவர்கள் தொடர்புக்கொண்டனர். மாலுமிகளின் எண்ணையும் அனுப்பியுள்ளனர். லெனின் அவர்களை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். இதனையடுத்து கப்பல் மாலுமியின் கூகுள் பே அக்கவுண்டுக்கு 1,30,000 பணத்தை அனுப்பியுள்ளார்.

கப்பல்
பணம் வந்ததும் டீசல் இன்றி உயிருக்கு போராடியபடி கொச்சின் துறைமுகம் அருகே ஆழ்கடலில் தத்தளித்த கொல்லம் மீனவர்கள் விசைப்படகு ஓட்டுநர் ஜெகன் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரையும் தவிக்க விட்டுவிட்டு 1,30,000 பணத்துடன் கொச்சின் துறைமுகம் அருகே நங்கூரம் பாய்ச்சி இருந்த எம்டி லாயல்டி என்ற ஆயில் டேங்கர் கப்பல் மாலுமி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மாலுமியின் இந்த செயலால் மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய சமூக ஆர்வலரும் குளச்சல் மீனவர் சங்க தலைவர் ஆன்றோ லெனின் ஆகியோர் அதிர்ந்து போயினர். கப்பல் மாலுமியிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரவேண்டும் என்று சமூக ஆர்வலரும் மீனவர் சங்கத் தலைவருமான ஆன்றோ லெனின் கடலோர காவல் நிலையங்கள் தமிழக டிஜிபி மீஞ்சூர் காவல் நிலையம் என பல்வேறு இடங்களில் புகார் அளித்திருந்தார்.

கப்பல்
லெனின் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். லெனினை தொடர்பு கொண்ட அட்லாண்டிக் ஏஜென்சி ஆயில் டேங்கர் கப்பல் நிறுவனம் தங்களது மாலுமி இதில் சம்பந்தப்படவில்லை என்று கூறி சென்னைக்கு வர வைத்து மீனவ சங்க தலைவரை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனிடையே மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எம்டி லாயல்டி எஸ் ஐ எஸ் எல் என்ற ஆயில் டேங்கர் கப்பல் மாலுமிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
Also Read: வாங்காத கடனுக்கு வட்டி.. 450 பவுன் தங்க நகைகளை ஏப்பம் விட்ட ஊழியர்கள் - பொதுமக்கள் குமுறல்
விசாரணையில் குளச்சல் பகுதியில் சமூக ஆர்வலர் ஆன்றோ லெனினிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து கப்பலில் ஏஜென்சி தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு கான அழைப்பு விடுத்துள்ளது.மேலும் பணத்தை திரும்ப தருவதாகவும் கூறியுள்ளது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மும்பையைச் சேர்ந்த எம்டி லாயல்டி எஸ் ஐ எஸ் எல் என்ற ஆயில் டேங்கர் கப்பலை அங்கேயே நிறுத்தி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: பார்த்த சாரதி ( திருவள்ளூர்) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.