• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரூ.5 லட்சம் கொடுத்து சொர்க்கபுர ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நியமனம் செய்ய எழுதி வாங்கிய நித்தியானந்தா

ரூ.5 லட்சம் கொடுத்து சொர்க்கபுர ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நியமனம் செய்ய எழுதி வாங்கிய நித்தியானந்தா

நித்தியானந்தா சொர்கபுரி ஆதினம்

நித்தியானந்தா சொர்கபுரி ஆதினம்

திருவாரூரில் வீடுகட்ட ஐந்து லட்ச ரூபாய் நிதிஉதவி வழங்கியதற்காக அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தாவை சொர்க்கபுர ஆதினம் நியமனம் செய்துள்ளார்.

  • Share this:
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே பண்டாரவடை திருமாளம் கிராமம் உள்ளது. பண்டாரவடை திருமாகாளம் என்ற பெயரே நாளடைவில் மருவி திருமாளம் என்று மாறியுள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 12ஆம் நூற்றாண்டில் அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் என்பவரால் ஆதீனம் உருவாக்கப்பட்டு மடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த மடம் முழுவதுமாக சிதிலமடைந்து காட்சியளிக்கிறது.

சொர்க்கபுர ஆதீன மடத்திற்கு தமிழகம் முழுவதும் 62 கிளை மடங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். கடந்த 15 ஆம் நூற்றாண்டு வரை சொர்க்கபுர ஆதினம் பல்வேறு சொத்துக்களுடன் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. அதன் பிறகு பல்வேறு தரப்பு படையெடுப்புகளாலும், வெளிநாட்டவர் படையெடுப்புகளாலும் சொர்க்கபுர ஆதினத்தின் சொத்துக்கள் பல விதங்களில் அபகரிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டுமுள்ளன.

கடந்த 1964 ஆண்டு வரை சிவப்பிரகாச தேசிகர் என்பவரால் சொர்க்கபுர ஆதீன மடம் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. அதற்குப் பின்னர் அவர் தனது மருமகளிடம் ஆதினத்தின் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். சிவப்பிரகாச தேசிகர் மறைவிற்குப் பின்னர் அவரின் மருமகள் சூளிகாம்பாள் என்பவரால் சொர்க்கபுர ஆதின மடம் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.

சொர்க்கபுரி ஆதினம்


அவருக்கு மூன்று மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். இதில் சதாசிவம், சோமசுந்தரம், கல்யாணி ஆகிய 3 பேரும் மரணமடைந்து விட்டனர். தற்போது சூளிகாம்பாளின் கடைசி மகனான தண்டபாணி தேசிகர் என்பவர் சொர்க்கபுர ஆதின மடத்தை நிர்வகித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் ஆதீனத்தின் மடாதிபதியாகவும் இருந்து வருகிறார்.

சொர்க்கபுரி ஆதீன மடத்தின் சொத்துக்கள் சுமார் 2.500 ஏக்கர் என தனது தாய் கூறியுள்ளதாக தண்டபாணி தேசிகர் தெரிவிக்கிறார். இருந்தபோதிலும் அந்த முழு சொத்துக்கான ஆதாரங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இருப்பினும் மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் பலவும் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றங்களில் பல வழக்குகளை தொடுத்துள்ளார். சொர்க்கபுர ஆதீன மடத்தை நிர்வகிக்க போதிய வசதி இல்லாததால் பல்வேறு ஆதின மடங்களை மடாதிபதி தண்டபாணி தேசிகர் நாடியுள்ளார்.

அதன் ஒரு கட்டமாக திருவாடுதுறை ஆதீனத்தின் சார்பில் மடத்தில் உள்ள தெய்வங்களுக்கு ஒரு கால பூஜைக்கு தேவையான பொருள் உதவியை செய்து வந்துள்ளனர். தற்போது அதுவும் நிறுத்தப்பட்டு விட்டதாக தண்டபாணி தேசிகர் தெரிவிக்கிறார். இந்த நிலையில் மடத்தின் சொத்துக்களை மீட்கவும், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் பல்வேறு ஆதினங்களையும், மடாதிபதிகளையும் சந்தித்து வந்த சொர்க்கபுர ஆதின மடாதிபதி தண்டபாணி தேசிகர், கடந்த 2018 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் தொண்டமண்டல ஆதீனத்தை சந்தித்து உதவி கேட்டுள்ளார்.

அவர் சாமியார் நித்யானந்தாவிடம் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு பிடதி ஆசிரமத்திற்கு தொண்டமண்டல ஆதீனமும், சொர்க்கபுர ஆதின மடாதிபதி தண்டபாணி தேசிகரும் நித்தியானந்தாவை சந்திக்க சென்றுள்ளனர். அங்கு நித்யானந்தாவின் சீடர்களில் ஒருவரான சுந்தரேச மகாராஜ் என்பவரை சந்தித்துள்ளனர். அவரும் நித்யானந்தாவிடம் தெரிவித்து மடத்தை புணரமைப்பு செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தொண்ட மண்டல ஆதீனம் பண்டாரவடை திருமாளத்திற்கு வந்து மடத்தினை ஆய்வு செய்துள்ளார். அப்போது தண்டபாணி தேசிகர் வீடு சிதிலமடைந்து இருப்பதை பார்த்து நித்தியானந்தாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த நித்தியானந்தாவின் குழுவினர் சொர்க்கபுர ஆதின மடாதிபதி தண்டபாணி தேசிகருக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி அளித்து அவரது வீட்டை புனரமைப்பு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் சொர்க்கபுர ஆதீன மடத்தின் சொத்துக்களை மீட்கவும் மடத்தினை புணரமைப்பு செய்து புதிய கட்டிடங்கள் கட்டித் தரவும் உறுதி அளித்துள்ளனர். அதற்கு பதிலாக தண்டபாணி தேசிகருக்கு பிறகு நித்யானந்தாவே மடத்தின் ஆதீன மடாதிபதியாக இருக்கவேண்டுமென கையெழுத்துப் போட்டு தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு சம்மதித்து தண்டபாணி தேசிகரும் பத்திரத்தில் கையெழுத்திட்டு அது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ரூபாய் 5 லட்சம் நிதியுதவி தந்ததோடு இதுவரை மடத்திற்கான எந்த புனரமைப்புப் பணிகளும் செய்யப்படவில்லை என தண்டபாணி தேசிகர் கூறுகிறார். நித்யானந்தாவிடம் இருந்து 5 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு தனது பூர்வீக ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தாவை சொர்க்கபுர ஆதீன மடாதிபதி நியமித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: