திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் க.மாரிமுத்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை விட சுமார் 30000 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
கோட்டூர் ஒன்றியம் காடுவாகுடி கிராமத்தை சேர்ந்த 49 வயதான மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். 13 ஆண்டு காலமாக கோட்டூர் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வரும் இவர், விவசாயிகள், தொழிலாளர்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர்.
பி.காம் பட்டதாரியான மாரிமுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் அனைவருமே விவசாயக் கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இன்றவளவும் இவரது மனைவி ஜெயசுதா விவசாய கூலி வேலைக்கு சென்று வருகிறார். யாரிடமும் அதிர்ந்து பேசாத குணமுடையவர், வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் பணிவாக பழகும் குணாம்சம் கொண்டவர் என மாரிமுத்துவை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க...தஞ்சையில் இரவு நேர ஊரடங்கால் பூக்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல்... விவசாயிகள் வேதனை..
மாரிமுத்து தனது வேட்பு மனுவில் குடிசை வீடு, 58000 ரூபாய் கட்சிப் பணம், மனைவியிடம் சேமிப்பாக 1000 ரூபாய், 3 சவரன் தங்க செயின், 66 சென்ட் நிலம் உட்பட 3 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் தனது சொத்து மதிப்பு 20 கோடி ரூபாய்க்கு மேல் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
குடிசை வீட்டில் இருந்து சட்டமன்றத்திற்குள் நுழைய இருக்கும் மாரிமுத்துவின் வெற்றி வெகுஜன மக்களின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. சட்டமன்றத்தில் திருத்துரைப்பூண்டி மக்களின் குரலாக ஒலிப்பேன் என்று மாரிமுத்து தெரிவிக்கிறார்.
பணம், அதிகார பலம் இல்லாமல் வறுமையிலும் அரசியலில் வெற்றி பெற முடியும் என்பதை மாரிமுத்து சாதித்து காட்டியதுடன், அரசியலுக்கு வர நினைக்கும் சாமான்ய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளார்.
செய்தியாளர்: செந்தில் குமரன், திருவாரூர்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CPI, Thiruthuraipoondi Constituency, TN Assembly Election 2021