திருவாரூரில், நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையால்
நெல்லை உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியவில்லை எனக் கூறி கொள்முதல் நிலைய அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த விவசாயியிடம் இருந்து முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 450 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையமானது கடந்த ஜனவரி 24-ஆம் தேதியன்று திறக்கப்பட்டது.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடியக்கமங்கலம், சேமங்கலம், கானூர், கிடாரம்கொண்டான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதுவரை 3000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடியக்கமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைன் பதிவு செய்வதில் கால தாமதம் ஆவதாகவும், இதனால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாமல், விவசாயிகள் நெல் மூட்டைகளை அறுவடை செய்து வயல் மற்றும் வீடுகளில் வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
Must Read : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டி - அண்ணாமலை அறிவிப்பு
மேலும், ஒரு மூட்டை நெல் 40 கிலோ 580 கிராம் பிடிக்க வேண்டிய நிலையில் கொள்முதல் நிலைய ஊழியர்கள் நெல்லின் எடையை 42 கிலோ எடை வைத்து, அதிக அளவில் பிடிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் கொள்முதல் நிலைய அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் விரைவாக கொள்முதல் செய்யப்படும் என உறுதி அளித்ததனர். அதன் பின்னர், விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.