வங்கி வாசலில் திருட்டு போன பணத்தை 12 மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு குவியும் பாராட்டு!

கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்

மன்னார்குடியில் வங்கி வாசலில் திருட்டு போன ரூ.4.6 லட்சம் பணத்தை, 12 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

  • Share this:
மன்னார்குடியில் வங்கி வாசலில் திருட்டு போன ரூ.4.6 லட்சம் பணத்தை, 12 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திருவாரூர் மன்னார்குடியில் ஆசிரியரிடம் 4.6 லட்சம் கொள்ளை சம்பவம் ஆந்திர மாநில கொள்ளையர்கள் நான்கு பேர் 12 மணி நேரத்தில் கைது. பணத்தை மீட்டு ஆசிரியரிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டு.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த அரிச்சபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் நீடாமங்கலம் அருகே உள்ள கற்கோவில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது கண்ணன் மன்னார்குடியில் வாடகை வீட்டில் குடியேறி சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதற்காக வங்கியில் வீட்டுக் கடன் விண்ணப்பித்து இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மன்னார்குடி கடைவீதியில் இயங்கும் பரோடா வங்கியில் இருந்து வங்கி கடன் 4 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை வங்கியில் இருந்து ரொக்கமாக எடுத்துக்கொண்டு கண்ணன் வங்கியை விட்டு வெளியே வந்துள்ளார்.  தனது இரு சக்கர வாகனத்தில் உள்ள டேங்க் கவரில் மொத்தப் பணத்தையும் வைத்துள்ளார். அப்போது கண்ணனை நோக்கி வந்த மர்ம நபர் ஒருவர் கீழே ஒரு நூறு ரூபாய் நோட்டு கிடக்கிறது. அது உங்களுடையது என்றால் அதனை எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி கண்ணனின் கவனத்தை திசைதிருப்பி இருசக்கர வாகன டேங்க் கவரில் இருந்த 4 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து,  எஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து  சிசிடிவி காட்சிகள் உதவியோடு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகள் அனைவரும் வேளாங்கண்ணி பகுதியில் கொள்ளையடித்த பணத்தோடு பதுங்கி இருப்பது காவல்துறையினரின் தீவிர தேடுதலில் தெரியவந்தது .

அதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் திருட்டு சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்தில் 4 குற்றவாளிகளையும் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களிடமிருந்து ரூ.4.6 லட்சம் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று பணத்தை இழந்த கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து கொள்ளையர்களிடம் இருந்து மீட்ட 4.6 லட்சம் ரொக்கத்தை அவரது குடும்பத்தினரிடம் எஸ்பி கயல்விழி வழங்கினார்.

மேலும்  எஸ்பி கயல்விழி குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படை காவல் துறையினருக்கு வெகுமதி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: