ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தியாகராஜர் தேரோடும் வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்டுவது சரியல்ல - அண்ணாமலை

தியாகராஜர் தேரோடும் வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்டுவது சரியல்ல - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

BJP Annamalai: கருணாநிதியின் பெயரை இந்த சாலைக்கு சூட்டினால், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்ச்சியாக செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்படும் - அண்ணாமலை

திருவாரூர் தெற்கு வீதியை கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து, திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு  பாஜக முன்னாள்  திருவாரூர் மாவட்டத்  தலைவர்  ராகவன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மற்றும் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டுவது ஊர் பெயர்களை மாற்றுவது என, இரண்டு வியாதிகள் பிடித்திருக்கின்றன.இந்த வியாதி காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. அதன் காரணமாக குடும்பத்தினரின் பெயரை அவர்கள்  சூட்டினார்கள். அந்த வியாதி திமுகவுக்கும் தற்போது வந்துவிட்டது.

Also Read:  சசிகலாவுக்கு காலம் கடந்த ஞானோதயம் வந்துள்ளது - கடம்பூர் ராஜூ விமர்சனம்

பிரதமர் மோடி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போதிலும், ஒரு திட்டத்துக்கு கூட தனது பெயரை வைக்காமல் நாட்டு மக்களின் நலன் சொல்லுகின்ற பெயர் சூட்டினார். இத்தகைய நிலையில் திருவாரூரில் தியாகராஜர் தேரோடும் வீதியை கருணாநிதியின் பெயரை சூட்ட நினைப்பது கண்டிக்கத்தக்கது. திருவாரூர் தெற்கு வீதி என்பது, ஆசியாவிலேயே புகழ்மிக்க ஆழித் தேரோடும் வீதி. பல்லாயிரக்கணக்கான பெரியவர்கள், ஆன்மீக எண்ணத்தோடு நடந்து வந்துள்ளார்கள்.

குறிப்பாக மனுநீதிச் சோழன் இந்த மண்ணை ஆண்ட போது, பசுவின் கன்று, தனது மகன் வீதிவிடங்கன் ஓட்டிய ரதத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்று, ஆராய்ச்சி மணியை அடித்து சொன்னபோது, பசு கன்று கொன்றுவிட்டால் ஏதேனும் யாகம் வளர்த்து, பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம்  என்று அமைச்சர்கள் அறிவுரை கூறியபோது, தனது மகனை தேர்க்காலில் வைத்து கொலை செய்து நீதி வழங்கினார். அத்தகைய மன்னன் இந்த தெற்கு வீதியில் கூட பவனி வந்து இருப்பார். இத்தகைய ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பெருமையை கொண்ட இந்த வீதிக்கு, கருணாநிதியின் பெயரை சூட்டுவது சரியல்ல.

மனுநீதிச்சோழன் பெயரை சூட்டினால்  கூட பாஜக அதனை ஏற்றுக் கொள்ளும். கருணாநிதியின்  பெயர் சூட்ட வேண்டும் என்றால், தமிழகத்தில்  சாலை வசதி இல்லாமல் எத்தனையோ கிராமங்களில், மக்கள் அல்லல்பட்டு வருகிறார்கள். அங்கு சாலை வசதியை ஏற்படுத்தி, அந்த சாலைக்கு கருணாநிதியின் பெயரை சூட்டுங்கள். இதனையும் மீறி, கருணாநிதியின் பெயரை இந்த சாலைக்கு சூட்டினால், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்ச்சியாக செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்படும்.

செய்தியாளர்: செந்தில்குமரன் (திருவாரூர்)

Published by:Ramprasath H
First published:

Tags: Annamalai, BJP, DMK, Karunanidhi's memorial, MK Stalin, Tamil News, Tamilnadu, Thiruvarur