உயிருக்கு போராடிய ஒன்றரை வயது குழந்தை: உரிய நேரத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த ரோந்து காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு!

ஒன்றரை வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு குவியும் பாராட்டு

ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ, கார், பேருந்து சேவை எதுவும் இல்லாத நிலையில் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு பெற்றோர்கள் சாலையோரத்தில் செய்வதறியாது நின்றுள்ளனர். 

  • Share this:
திருவாரூர் அருகே வலிப்பு வந்து உயிருக்கு போராடிய ஒன்றரை வயது குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றிய ரோந்து காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிதீவிரமாக இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் ஏழாம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் வாடகை கார்கள், ஆட்டோ, டாக்ஸி, பேருந்துகள் என பொது போக்குவரத்திற்கு தற்போது வரை திருவாரூர் மாவட்டத்தில் தடை நீடித்து வருகிறது.

குறிப்பாக கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தினசரிக் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஊரடங்கு காரணமாக குறைந்து வந்தாலும் இளம் வயதுடையோர் தொடர்ந்து உயிரிழந்து வருவது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளும் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. இருப்பினும் தனியார் தொண்டு அமைப்புகள், காவல் துறையினர், மருத்துவர்கள் என கொரோனா காலகட்டத்தில் முடங்கியுள்ள பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுப் போக்குவரத்து முடக்கம் காரணமாக நன்னிலம் அருகே வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய ரோந்து பணி காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, இவரது மனைவி மெல்மா. இவரது ஒன்றரை வயது குழந்தை சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு தனது இருசக்கர வாகனத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் முத்துக்குமாரசாமி சென்றுள்ளனர்.

அப்போது சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது இருசக்கர வாகனம் பழுதாகி நின்றுவிட்டது. திடீரென குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளது. ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ, கார், பேருந்து சேவை எதுவும் இல்லாத நிலையில் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு பெற்றோர்கள் சாலையோரத்தில் செய்வதறியாது நின்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் உடனடியாக ரோந்து வாகனத்தில் குழந்தையை அழைத்துக்கொண்டு நன்னிலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்த மருத்துவர் சரியான நேரத்தில் குழந்தையை கொண்டு வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது என்று கூறியுள்ளார்.

தங்களது குழந்தையை தக்க சமயத்தில் காப்பாற்றிய காவல்துறையினருக்கு முத்துக்குமாரசாமியும், மெல்மாவும் நன்றியை தெரிவித்தனர். மேலும் இந்த தகவலை அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் குழந்தையை காப்பாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரோந்து பணி காவல்துறையினருக்கு பல்வேறு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
Published by:Esakki Raja
First published: