• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருவண்ணாமலை தீபத் திருவிழா: 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி- தமிழக அரசு

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி- தமிழக அரசு

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம், பிற மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் என 20 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கிரிவலத்திற்கு அனுமதிக்க முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
கார்த்திகை மாத தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மகா கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். பல லட்சம் பக்தர்கள் அன்றைய தினத்தில் கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து சாமியை வழிபட்டு செல்வர். தற்போது கொரோனா தொற்று காரணமாக கிரிவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மகா கார்த்திகை தீபத் திருவிழாவிற்கும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டி.செந்தில்குமார் தாக்கல் செய்த பொது நல மனுவில், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற மகா கார்த்திகை தீபத்தை விழாவிற்கு, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது தவறானது என  குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றில் அனைவரும் அனுமதிக்கப்படும்போது கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க மறுப்பதாக தனது மனுவில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ஜெய்பீம் திரைப்படத்தை அங்கீகரிக்கக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் கடிதம்


இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி நேற்று வரை 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும், 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவிற்கு 20 லட்சத்திற்கு மேலானவர்கள் வருவார்கள் என்றும், இரண்டு நாட்களில் 3 லட்சம் பேர் கிரிவலம் செல்வார்கள் என்றும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்தார்.  கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் இப்போதும் பின்பற்றுவதாக தெரிவித்தார்.

அரசின் நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்ய  அறிவுறுத்தி பிற்பகலுக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் என 20 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கிரிவலத்திற்கு அனுமதிக்க முடியும் என்றும், அவர்கள் மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதியில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 18, 19, 20 தேதிகளில் கட்டளைதாரர்களுக்கு மட்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: பொங்கல் தொகுப்பு: ரேஷன் கார்டுக்கு ரூ.2500 வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்


இரு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தீபத்திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்து பக்தர்களை அனுமதிப்பர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் தீபத்திருவிழாவை இணைய தளத்திலோ அல்லது தொலைகாட்சிகளிலோ காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. கட்டளைதாரர்கள், பக்தர்கள் என அனைவருமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பக்தர்கள் பின்பற்ற அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: