தடையை மீறி சிலை வைப்போம்.. ஆட்சியருடனான ஆலோசனை கூட்டத்தில் இந்து அமைப்பினர் கறார்!!

தடையை மீறி சிலை வைப்போம்.. ஆட்சியருடனான ஆலோசனை கூட்டத்தில் இந்து அமைப்பினர் கறார்!!

விநாயகர் சதூர்த்திக்கு சிலை வைக்க அரசு அனுமதிக்கவில்லை என்றால் தடையை மீறி வைப்போம் என இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிடிவாதமாக தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற பத்தாம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா பெரும் தொற்று காரணமாக, இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் தெருக்களில் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

  இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னெச்சரிக்கை மற்றும் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை விளக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் ஹிந்து மத அமைப்புகள், விநாயகர் சிலை செய்யும் சிற்பிகள் என பலதரப்பட்ட பொதுமக்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

  இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கூறுகையில், விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு இதற்கு மறுபரிசீலனை செய்து உடனடியாக தடையை நீக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம் என இந்து மத அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

  Also read: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை.. பட்டாசு விற்பனை கடுமையாக பாதிப்பு..

  மேலும் விநாயகர் சிலை செய்யும் சிற்பிகள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை நம்பி 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்து சிலைகளை வடிவமைத்து உள்ளதாகவும், விநாயகர் சிலை தடை விதித்தது என்பது எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூபாய் 10 கோடி அளவிற்கு சிலை செய்பவர்களுக்கு இழப்பு ஏற்படும் என அவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் அரசாங்கம் மறுபரிசீலனை செய்து கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலை வைக்க அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது. இந்து அமைப்புகள் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கையை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவோம். அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

  மேலும் தடையை மீறி விநாயகர் சிலையை வைப்போர் மற்றும் ஊர்வலம் செல்பவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

  செய்தியாளர் - சதீஷ்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: