21ம் நூற்றாண்டில் சடலங்களைக் கொண்டு செல்ல இரு சாலை முறை என்பதை ஏற்க முடியவில்லை என்று வீரளூர் சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை ஆணையர் அருண் ஹால்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த வீரளூர் ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தவரின் உடலை எடுத்து செல்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 16ம் தேதி மாலை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களின் வீடுகளின் மீது ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி சேதம் ஏற்படுத்தினர்.
இந்த தாக்குதல் தொடர்பாக கடலாடி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதிக்க சாதியைச் சார்ந்த 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 250க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பார்வையிடவும், தாழ்த்தப்பட்ட மக்களிடம் நேரடியாக விசாரணை நடத்தவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை ஆணையர் அருண் ஹால்டர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 21ம் நூற்றாண்டில் சடலங்களைக் கொண்டு செல்ல இரு சாலை முறை என்பது ஏற்க முடியவில்லை எனவும் இதற்கான காரணம் என்ன? ஏன் இவ்வாறு செய்தார்கள் என அரசு அதிகாரிகளுடன் பேசி இதுகுறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 307வது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஒரு சிலர் கைது செய்யப்படாமல் உள்ளனர் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது 5 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டு விடுபட்ட நபர்கள் கொடுக்கும் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் 24 மணி நேரத்தில் இரண்டு வழிமுறையை ரத்து செய்து ஒரே வழியில் அனைத்து தரப்பினரின் சடலங்களும் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
செய்தியாளர்: சதீஷ்
மேலும் படிங்க: நடிகர் விஜய் குறித்த நீதிபதியின் எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்- சென்னை உயர் நீதிமன்றம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Caste, Thiruvannamalai