செங்கம் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களை ரேகிங் செய்த புகாரில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்னாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு 11 ஆம் வகுப்பு மாணவர்களை விசிறி விடச் சொல்லியும், நடனமாடச் சொல்லியும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ரேகிங் செய்ததாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இது எந்தப் பள்ளியில் நடந்த சம்பவம் என்பது தெரியாத நிலையில் கல்வித்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் வீடியோவில் உள்ள மாணவர்கள் செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது.
ரேகிங் புகார் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன் பள்ளியில் விசாரணை நடத்தினார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரனைக்குப் பின்னர் ரேகிங்கில் ஈடுபட்ட 5 மாணவர்கள் மே மாதம் 4 ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது. மேலும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து ஆர்டிஓ மூலம் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விக்னேஷ் லாக் அப் மரணமா.. சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்: ரூ.10 லட்சம் நிவாரணமும் அறிவிப்பு
ஆசிரியர்களை மிரட்டுவது, வகுப்பறையிலேயே நடனமாடுவது என பள்ளி மாணவர்கள் தொடர்பான வீடியோக்கள் அன்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் சூழலில் மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: சதீஷ்
s
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.