மணல் கடத்தலுக்காக ரூ.23 லட்சம் லஞ்சம்: கூடுதல் லஞ்சம் கேட்பதாக காவல் ஆய்வாளர் மீது மணல் கடத்தல்காரர் புகார்

மாதிரிப் படம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, போலீசார் ஏற்கனவே மாதம் 23 லட்சம் ரூபாய் மாமூல் வாங்கி வரும் நிலையில் கூடுதல் மாமூலுக்காக வாகனங்களை சிறைபிடிப்பதாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர் பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளார். 

 • Share this:
  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக சசிக்குமார் மற்றும் எஸ்பிசிஐடியாக ராஜ்குமார் ஆகியோர் பணிபுரிகின்றனர்

  இவ்ரகள் அல்லாமல் 15க்கும் மேற்பட்ட காவலர்கள் அந்தக் காவல்நிலையத்தல் பணிபுரிகின்றனர். கண்ணமங்கலம் நாகநதியில் பட்டப்பகலில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.

  நதியை ஒட்டியுள்ள அம்மாபாளையம், புதுப்பாளையம், மேல்நகர், கீழ்நகர் ஆகிய பகுதிகளில் மணல் கொள்ளை அமோகமாக நடந்து வருகிறது. கண்ணமங்கலத்தில் சுதாகர் என்பவர் உள்ளிட்ட 23 நபர்கள் நாகநதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

  செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஆற்றில் மணல் கடத்தி வந்த சுதாகரின் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும், சுதாகர் மீது மணல் கடத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

  இதுகுறித்து காவலர்களிடம் பேசிய சுதாகர், கடந்த சனிக்கிழமை தான் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் செலுத்தியதாகவும் மீண்டும் எதற்கு வாகனத்தைப் பிடிக்க வேண்டும் எனவும் கேட்டதாக கூறப்படுகிறது.

  ஆய்வாளர் சொன்னதால் வாகனத்தைப் பிடித்ததாக காவலர்கள் கூற, கோபமடைந்த சுதாகர், காவல் ஆய்வாளர் சசிக்குமாரைத் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியுள்ளார். அந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த சுதாகர், போலீசார் மாமூல் அதிகமாக கேட்டதால் 2 மாதங்களாக மணல் கடத்தலில் ஈடுபடுவதையே நிறுத்தி விட்டதாகவும் மீண்டும் போலீசார் கேட்டுக் கொண்டதின் பேரில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாகவும் பகிரங்கமாக போட்டு உடைத்தார்.

  மேலும், மணல் கடத்தும் நபர்கள், எஸ்பிசிஐடியாக பணியாற்றும் ராஜ்குமார் மற்றும் கட்டப்பஞ்சாயத்துகள் நடத்தி வரும் சத்தியமூர்த்தி ஆகிய 2 பேர் மூலம் காவல்நிலையத்திற்கு மாதம் 23 லட்சம் ரூபாய் மாமூல் தருவதாகவும் தெரிவித்தார்.

  இதுகுறித்து காவல் ஆய்வாளர் சசிக்குமாரைத் தொடர்பு கொண்டபோது நேரில் வந்தால் விளக்கம் தருவதாகக் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டார்.

  மணல் கடத்தலைத் தடுக்க வேண்டிய போலீசாரே, அதை மாமூலுக்காக ஊக்குவிப்பது எந்த வகையில் நியாயமானது எனக் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அரவிந்த், இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலரும் கோரிக்கைவைக்கின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: