வந்தவாசியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 24 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த
திமுக வேட்பாளர் மயிலாட்டம் ஒயிலாட்டம் பேண்ட் வாத்தியத்துடன் குத்தாட்டம் போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை , ஆரணி வந்தவாசி, திருவத்தியூர் ( செய்யார்) என 4 நகராட்சிகள் உள்ளன. இந்த நான்கு நகராட்சியில் 123 வார்டுகளும் 283 வாக்குசாவுடிகள் மற்றும் ஆண் , பெண், மூன்றாம் பாலினம் 256274 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 10 பேரூராட்சிகளைக் கொண்டது.
இவற்றிற்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து, அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர்.இந்த நிலையில் வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று வந்தவாசி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் களைகட்டியது.
அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, நாம் தமிழர் விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: நீட் மசோதா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
உள்ளாட்சி நகர்புற தேர்தலில் வந்தவாசி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 24- வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ரீனா இளவரசி வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்பொழுது ஒயிலாட்டம், மயிலாட்டம், பொம்மையாட்டம், பேண்டு வாத்தியம், முழங்க வீதி வீதியாக குத்தாட்டம் போட்டுக்கொண்டு ஊர்வலமாக வந்தார்.அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதனை வியப்புடன் பார்த்து சென்றனர்.
செய்தியாளர் - மோகன்ராஜ்,ஆரணி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.