பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மாதா மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்களும், சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் பல லட்சம் பக்தர்களும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசாங்கமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் ஒரு பகுதியாக திருக்கோவில்களுக்கும், திருவிழாக்களுக்கும், தடை விதித்து உத்தரவிட்டது. அதன்படி திருவண்ணாமலை கிரிவலத்திற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலுமாக குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிவலத்திற்கு தடை விதித்திருந்த நிலையில், கடந்த பங்குனி மாத பவுர்ணமி தினத்தில் கிரிவலத்துக்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 02.33 மணிக்கு தொடங்கிய பௌர்ணமி கிரிவலம் நாளை (17.04.2022) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01.17 வரை பக்தர்கள் கிரவலம் வரலாம் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பக்தர்களின் வருகை என்பது கடந்த ஆண்டுகளை விட அதிக அளவில் காணப்படுகிறது.
கிரிவலப் பாதை முழுக்க பல்வேறு இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்கும் பணிகளிலும், உயர் மின் விளக்குகள் சரிசெய்யும் பணிகளிலும் பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைத்து தூய்மையான குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு சுகாதாரமான அன்னதானம் வழங்கும் வகையில் 40 இடங்களில் அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை கோவில்
கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு கோடை வெயிலை எதிர்கொள்ளும் வகையில் குடிநீர், நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கும் பணிகளிலும் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக 15 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
சித்ரா பௌர்ணமி பாதுகாப்பு பணிக்காக 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், திருவண்ணாமலை நகரம் கிரிவலப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிரிவலப் பாதையில் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக முப்பத்தி ஒன்பது இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை
சித்ரா பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கற்பூரம் ஏற்றவும் மலை ஏறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று கிரிவலப்பதை முழுக்க மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், ஊரக உள்ளாட்சி துறை சார்பில் போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்றன. சித்ரா பவுணர்மிக்கு கிரிவலம் வரும் பக்தர்களின் நலன் கருதி கட்டணமில்லா பேருந்து வசதி, 40 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
Read More : புகழ்பெற்ற செண்பகவல்லியம்மன் திருக்கோவில் தெப்பத்திருவிழா ( படங்கள் )
இது குறித்து வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா நேற்று கூறுகையில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 3500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், மாடவீதி கிரிவலப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் உதவியுடன் தொடர்ந்து பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அனைத்து இடங்களிலும் ஃபேஸ்டக் மூலம் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என்றும், நகரப்பகுதி கிரிவலப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆன்மீக பக்தர்களுக்கு உதவும் வகையில் 40 இருசக்கர வாகனங்கள் மூலம் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் கூறினார். மேலும், கோவிலுக்குள்ளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Must Read : மதுரையே அதிர வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்...
கிரிவலம் வந்துள்ள பக்தர்கள் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ள சித்ரா பவுர்ணமி தினத்திற்காக தாங்கள் ஒவ்வொரு நாளும் ஏங்கி வந்ததாகவும் தற்போது மிகுந்த மன மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் கிரிவலத்திற்கு வந்துள்ளதாகவும் கூறினர். மேலும், பக்தர்களுக்கு செய்து கொடுத்துள்ள அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் இதனால் நிம்மதி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் - அ.சதிஷ், திருவண்ணாமலை.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.