உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நீடித்து வருகிறது, இரு தரப்புக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனை சேர்ந்தவர்கள் சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு வந்து பல்வேறு நகரங்களில் தங்கி இருக்கின்றனர்.
அதன்படி, திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டினர் தங்கி இருக்கின்றனர். உக்ரைனில் நடைபெற்று வரும் போரால் அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் கொண்டுவந்த பணமும் செலவாகி விட்டதால், தங்க இடமின்றியும், உணவு, உடையின்றியும் அவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதைக் கேள்விப்பட்ட, திருவண்ணாமலை பெரும்பாக்கம் ரோட்டில் ‘குளோபல் வாட்ச் டிரஸ்ட்’ எனும் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சமூக சேவகர் வி.எஸ்.சத்யன், சன் ஷைன் எனும் தனது சொந்த விடுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 22 பேருக்கு இலவசமாக உணவு மற்றும் உடை கொடுத்து தங்க வைத்துள்ளார். 6 நாட்களாக இங்கு தங்கி இருக்கும் இவர்களுக்கு திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லவும் கிரிவலம் செல்லவும் தேவையான வாகன வசதியும் இலவசமாக செய்து தந்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதை பார்த்து இந்தியாவில் வெளிமாநிலங்களில் உள்ள உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களும் இங்கு வந்து தங்க ஆரம்பித்துள்ளனர். உணவு உடை கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை அவர்களே தயாரித்து சாப்பிடும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார். தங்க வைத்துள்ள தமிழரின் மனித நேயத்தை பாராட்டியுள்ள அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள யாத்ரிகா நிவாஸ் போன்ற அரசின் தங்கும் விடுதிகளில், தங்க வைத்து தேவையான உதவிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஒரு மாதகால விசாவில் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளதாகவும் உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக உக்ரைனில் உள்ள வங்கிகள் அனைத்தும் வேலை செய்யாததால் அவர்களால் இந்தியாவில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை என்றும் அதேபோல் ரஷ்யாவை சார்ந்தவர்கள் வெளிநாடுகளில் தங்களது வங்கிக் கணக்கை பயன்படுத்தி பணம் எடுக்க முடியாததால் அவர்களும் அவதிப்பட்டு வருவதாகவும் பணம் இல்லாமல் இந்தியாவில் அவர்கள் அகதி போல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Must Read : மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
மேலும், தமிழகத்தில் திருவண்ணாமலை, மகாபலிபுரம் போன்ற சுற்றுலாத் தலங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் என்றும் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 2000 நபர்கள் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ள அவர் இவர்களை இனம் கண்டு இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசு அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும் எனவும் சத்யன் கோரிக்கை விடுத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Russia - Ukraine, Tiruvannamalai