திருவண்ணாமலையில் இறைச்சிக்கடை உரிமையாளர் கழுத்து அறுத்து கொலை.. சிறுவன் கைது..

கோப்புப் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இறைச்சிக்கடை உரிமையாளர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

  • Share this:
    திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டில் மீன் மற்றும் கோழி மொத்த வியாபாரம் செய்துவந்தார் 40 வயது கிறிஸ்த்துவராஜ். குடும்ப சண்டை காரணமாக மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை பிரிந்து தனியாக கிறிஸ்துவராஜ் வசித்து வருகிறார். காலை வெகு நேரமாகியும் கிறிஸ்த்துவராஜ் வீட்டை விட்டு வெளியே வராததால், வீட்டிற்குள் சென்று அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது கிறிஸ்து ராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

    அதிர்ச்சியடைந்த அவர்கள் தச்சம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். தொழில் போட்டி காரணமா? அல்லது நகை, பணத்திற்காக கொலை நடந்ததா ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கொலைக்கு முந்தைய இரவு கிறிஸ்த்துவராஜ் உள்ளூர் சிறுவனுடன் மது அருந்தியது தெரியவந்தது. அவர் யாருடன் மது அருந்தினார் என்ற விபரங்களை சேகரித்ததில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஊரடங்கு காலத்தில் செலவுக்கு பணம் இல்லாததால் பணம் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்ததாக கைதான 17 வயது சிறுவன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    மது போதையில் இருந்த கிறிஸ்துவராஜை காய்கறி வெட்டும் கத்தியால் பின்பக்க கழுத்தை அறுத்து குத்தியும் கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் கைதான சிறுவன். அவரிடம் இருந்து 15000 ரொக்கப்பணம் 2 சவரன் தங்க மோதிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    மேலும் படிக்க... 12th Exam | 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் இன்று ஆலோசனை

    சிறுவன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறார் கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இந்த கொலை சம்பவம் உணர்த்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: