Home /News /tamil-nadu /

போலீசார் அடித்ததால் இறந்தாரா? விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் மர்ம மரணத்தால் திருவண்ணாமலையில் பரபரப்பு

போலீசார் அடித்ததால் இறந்தாரா? விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் மர்ம மரணத்தால் திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலையில் பரபரப்பு

Tiruvannamalai : திருவண்ணாமலையில், சாராய விற்பனை வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் மர்ம முறையில் மரணம் அடைந்துள்ளார். காவல்துறையினர் அடித்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்த நிலையில், அங்கே பரபரப்பு நிலவுகிறது.

மேலும் படிக்கவும் ...
    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தட்டரணை கிராமத்தில் குறவர் இன குடும்பத்தினர் 120 நபர்கள் வசித்து வருகின்றனர். அந்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மனைவி மலர். இந்நிலையில் கடந்த 26ம் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சாராய வழக்கு குறித்து சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்ய வீட்டிலிருந்த தங்கமணியை திருவண்ணாமலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். விசாரணை முடிந்து தங்கமணியை திருவண்ணாமலை கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

    இரண்டு நாட்களாக கிளைச் சிறையில் இருந்த தங்கமணிக்கு நேற்று மாலை (27.04.2022) உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கிளை சிறை அதிகாரிகள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கமணி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இதுதொடர்பாக தங்கமணியின் உறவினர்களுக்கு தங்கமணி இறந்து விட்டதாக காவல்துறையினர் நேற்று இரவு தகவல் தெரிவித்தனர்.

    இதனிடையே பாதிக்கப்பட்ட தங்கமணியின் உறவினர்கள் அவரை போலீசார் அடித்ததால் இறந்தார் என்றும், தாங்கள் குறவர் இன மக்கள் என்பதால் தங்கள் மீது பொய்யாக சாராய வழக்கு போடுவதாகவும், சாராய வழக்கு போடக் கூடாது என்றால் ஆய்வாளர் தங்களிடம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாகவும், தனது அப்பாவின் மரணத்திற்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தான் காரணம் என இறந்துபோன தங்கமணியின் மகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

    மேலும், தனது தந்தையின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் கிராமத்தார் மீது போடும் பொய் வழக்குகளை போலீசார் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த உறவினர்களை காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இறந்த தங்கமணியின் மகன்


    அதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆட்சியரை சந்தித்த உறவினர்கள் முறையான நீதி விசாரணை செய்ய வேண்டும் என்றும் தவறு செய்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

    இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அலைபேசியில் அழைத்தபோது, சாராயம் விற்பனை செய்த தங்கமணியை தாங்கள் கைது செய்ததாகவும் அவருக்கு திடீரென நேற்று இழுப்பு வலி வந்ததாகவும் அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் தகவல் தெரிவித்தனர். இந்த நிகழ்வு திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர் - அ.சதிஷ், திருவண்ணாமலை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Lockup death, Tiruvannamalai

    அடுத்த செய்தி