• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை : 9 இடங்களில் சோதனை சாவடிகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை : 9 இடங்களில் சோதனை சாவடிகள்

திருவண்ணாமலை  தீபம்

திருவண்ணாமலை தீபம்

திருவண்ணாமலைக்கு புதன்கிழமை மதியம் ஒரு மணி முதல் 20ம் தேதி வரை வெளியூர்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் சேவை குறைக்கப்பட உள்ளன.

  • Share this:
    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைமுன்னிட்டு புதன்கிழமை மதியம் 1 மணி முதல் 20ம் தேதி வரை திருவண்ணாமலைக்குள் பக்தர்கள் நுழைவதை தடுக்க 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே தற்போதும் மாடவீதிகளில் சுவாமி உற்சவ விழா நடைபெற்று வருகின்றன.

    இந்த விழா நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் போட்டதற்கான சான்று அல்லது 72 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கோயில் பின் புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் வைபவம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், குறைவான பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக மலையேறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    மலை மீது ஏற கோயில் ஊழியர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. அண்ணாமலையார் கோயில் உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், விஐபி.க்கள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி, புதன்கிழமை மதியம் ஒரு மணி முதல் 20ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு செல்லக் கூடிய ஒன்பது பிரதான சாலைகளிலும் தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து, வாகனங்களில் வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை நகராட்சிக்குள் உள்ளூர் முகவரியில் உள்ள வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தீபத் திருவிழாவிற்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இந்த ஆண்டு இயக்கப்படாது. வழக்கமாக தீபத் திருவிழாவன்று சுமார் 25 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வரும் நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் வருகையை தடுத்து நிறுத்துவதற்காக வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    குறிப்பாக பக்தர்கள் மலை ஏறும் வழிகளில் வனத்துறையினருடன் இணைந்து கமாண்டோ படை வீர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மகா தீபத்தை காண திருவண்ணாமலை நகரில் 10 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், திருவண்ணாமலைக்கு சென்னை, ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் எண்ணிக்கையை 50 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் விடுத்த கோரிக்கையை போக்குவரத்துதுறை ஏற்றுக் கொண்டுள்ளது.

    Must Read : திருப்பதிக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் செல்ல 2 நாட்களுக்கு தடை விதிப்பு!

    இதனால், திருவண்ணாமலைக்கு புதன்கிழமை மதியம் ஒரு மணி முதல் 20ம் தேதி வரை வெளியூர்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் சேவை குறைக்கப்பட உள்ளன. இதேபோன்று திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: