கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு!

கர்ப்பிணி மருத்துவர் கார்த்திகா

வீட்டில் 4  நாட்கள் இருந்த நிலையில், சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  • Share this:
    சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வசந்தம் நகரில் வசித்து வந்தவர் பெண் மருத்துவர் கார்த்திகா (29). தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் ஆவார். கார்த்திகாவின் கணவர் அரசு மருத்துவர் ஆவார். 8 மாத கர்ப்பிணியான கார்த்திகாவுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

    இதனிடையே, வீட்டில் 4  நாட்கள் இருந்த நிலையில், சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐந்து நாட்கள் கார்த்திகாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும், மீண்டும் சுவாசிப்பதிலும், மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டதால் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திகா இன்று காலை 5.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மருத்துவர் கார்த்திகாவின் தந்தை ராமலிங்கம் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர், தாயார் மணியம்மாள் தாய் சேய் நல மருத்துவர் கார்த்திகாவின் பெற்றோர் சொந்தமாக தனியார் மருத்துவமனை நடத்தி வந்தனர். அந்த மருத்துவமனையிலேயே கார்த்திகா தோல் மற்றும் அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கார்த்திகாவிற்கு  திருமணம் முடிந்து ஓர் ஆண்டே ஆகியுள்ள நிலையில், அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்ரியா கொரோனாவால் உயிரிழந்தார். சண்முகப்ரியா கொரோனா காலத்திலும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிக்கு சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து கர்ப்பிணி மருத்துவர்களுக்கு கொரோனா பணியில் விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - சதிஷ் அண்ணாமலை



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: