திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி ஆசிரியை லட்சுமி என்பவர் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என 12ஆம் வகுப்பு பயிலும் மாணவியை கண்டித்ததால் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர் .
கடந்த 15 தினங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதாகவும், அதற்கு பள்ளி சார்பில் மன்னிப்பு தெரிவித்ததாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடந்ததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி புதியதாக இன்று பொறுப்பேற்ற தலைமையாசிரியர் சுதாவிடம் சண்டையிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. பின்பு பள்ளியின் தலைமையாசிரியர் சுதா முற்றுகையில் ஈடுபட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்வதாக மன்னிப்பு கேட்டத்தின் பேரில் மாணவியின் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்திற்கு பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிகளிடம் விசாரணை செய்து முழுமையான அறிக்கையை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஆசிரியை மீது ஏதேனும் தவறு இருந்தால் அனைத்து பெற்றோர்களும் ஒன்று கூடி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
Must Read : டியூஷன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - நீதிமன்றம் உத்தரவு
மேலும், பள்ளி வளாகத்தில் போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் சுமார் 10க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் : மோகன்ராஜ், ஆரணி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.