பள்ளி கல்லூரிகள் உள்ள ஊர்களின் வழியே செல்லும் பேருந்து ஓட்டுனர்களின் நிலைமை என்பது சற்று சிக்கலாகவே உள்ளது. அதிலும் பேருந்து வசதி அதிகமாக இல்லாத ஊர்களில் வேலை செய்யும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கூட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்குள் ஒருவழியாகி விடுகின்றனர் . மேலும் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்யும் விவகாரம் இன்னும் இடையூறாக அமைகிறது.
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஆடையூர், தேவனந்தல், காஞ்சி, புதுப்பாளையம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகள் திருவண்ணாமலையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். அது மட்டுமன்றி திருவண்ணாமலைக்கு பல்வேறு பணிகளுக்காக தினந்தோறும் நூற்றுக் கணக்கானவர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்வர்.
குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் T 33 (புதுப்பாளையம் - திருவண்ணாமலை) என்ற அரசுப் பேருந்தை நம்பி பயணம் செய்கிறார்கள்.இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு புதுப்பாளையத்தில் இருந்து 110 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து ஆடையூர், தேவனந்தல் வழியாக கிரிவலப்பாதையில் உள்ள மண்டபம் அருகே வரும்பொழுது 250 பயணிகள் ஆன நிலையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கி பயணம் மேற்கொண்டனர்.
கடையினுள் புகுந்து முட்டை , போர்வை , உண்டியலை திருடிய முதியவர்... சிசிடிவியில் பதிவான காட்சி
இதனை அறிந்த நடத்துனர் கேசவன் படியில் ஆபத்தான நிலையில் தொங்கி பயணம் செய்த மாணவர்களை பேருந்துக்குள் வருமாறு அழைத்த பொழுது ஒரு சில மாணவர்களுக்கும் நடத்துனருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவர் ஒருவர் நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த நடத்துனர் உடனடியாக பேருந்தை திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு மற்ற பயணிகளை இறக்கினர்.காவல் நிலையத்திற்கு பேருந்து செல்வதை அறிந்த மாணவர் அங்கிருந்து தப்பித்தார்.
தங்கள் கிராமங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சரியான நேரத்திற்கு வருவதற்கு போதிய பேருந்துகள் இல்லாததால் அளவுக்கு அதிகமான கூட்டம் ஒரே பேருந்தில் ஏறி பயணம் செய்யும் நிலை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதியை உடனடியாக செய்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.90 லட்சம் மோசடி.. கணினி ஆபரேட்டர் கைது
இது குறித்து பேசிய நடத்துனர் வழித்தடங்களில் பேருந்தை நிறுத்தாமல் குறைவான பயணிகளை ஏற்றிச் சென்றால் மீண்டும் தங்களால் அந்த வழித்தடத்தில் செல்ல முடியாது என்றும் கிராம மக்கள் பல்வேறு பிரச்சனைகளை தங்களிடம் மேற்கொள்வார்கள் என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு நேரத்திற்கு செல்ல வேண்டிய கிராமங்களுக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது மாணவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. பள்ளி மாணவர் ஒருவர் நடத்துனருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியளார் : அ.சதிஷ், திருவண்ணாமலைஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.