வந்தவாசி குழந்தை விற்பனை: காதலன் மீது புகார் அளித்த காதலியும் சிக்கினார்

Youtube Video

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பெற்ற குழந்தையை பெற்றோரே விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது. தாய் தந்தை உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தை விற்பனை கும்பல் சிக்கியது எப்படி?

 • Share this:
  குழந்தையை 3.60 லட்சத்திற்கு வாங்கிய சென்னையைச் சேர்ந்த கும்பல், ஈரோட்டில் மற்றொரு கும்பலிடம் 5 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது. 9 பேர் சிக்கியுள்ள நிலையில், விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் என்ன?

  வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான பவானி. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான சரத்குமார் என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகியதையடுத்து, பவானி கர்ப்பமானார். கடந்த ஜனவரி 16ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பவானிக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணமாகமல் குழந்தை பிறந்தால் குழந்தையை வேறு ஒரு நபருக்கு கொடுத்துவிட்டு இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என சரத்குமார் கூறியுள்ளார்.

  அதற்கு பவானியும் சம்மதிக்க குழந்தையை நெருங்கிய உறவினரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பாக நெருங்கிய உறவினருக்கு குழந்தையை கொடுப்பதாக பவானியை நம்ப வைத்து சரத்குமார் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார்.

  அதன்பின்னர் வெகு நாட்களாகியும் வராத சத்குமாருக்கு சென்னை திருப்போரூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பதாக பவானிக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பவானி வந்தவாசி மகளிர் காவல்நிலையத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

  சரத்குமார் குழந்தையை வந்தவாசியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் மூலம் சென்னையைச் சேர்ந்த ஜோதி, கலைவாணி, அமுல், முனியம்மாள் ஆகியோரிடம் 3.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க... பழங்குடியின குடும்பத்தில் பிறந்த வீராங்கனை தீபிகா குமாரியின் சாதனை கதை

  அவர்கள் ஈரோடு பகுதியைச் சேர்ந்த நதியா, நந்தினி, ஜானகி, ஆகியோரிடம் 5 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் பவானியின் கணவர் சரத்குமார், குழந்தையை விற்க தரகராக செயல்பட்ட ஏழுமலை, ஈரோடு பகுதியைச் சேர்ந்த நந்தினி, ஜானகி ஆகிய 4 பேரை திங்கள்கிழமை கைது செய்ததுடன், குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.  மேலும் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்த சென்னையைச் சேர்ந்த ஜோதி, கலைவாணி, முனியம்மாள் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த நதியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  விசாரணையில் குழந்தையின் தாய் பவானியும் குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட குழந்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சீராட்டி வளர்க்க வேண்டிய குழந்தையை தாய் தந்தை இருவரும் சேர்ந்து விற்பனை செய்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: