Home /News /tamil-nadu /

கி.பி 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு - வரலாறு

கி.பி 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு - வரலாறு

நடுகல்

நடுகல்

போரில் வீரம்காட்டி இறந்த வீரர்களுக்கும் வேட்டையில் உயிர்நீத்த மறவர்களுக்கும் நடுகல் எடுத்து வணங்குவது பழந்தமிழர் மரபு.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பத்தில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

  திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ளது பூசிமலைக்குப்பம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றும் மா. சரவணன் என்பவர் பள்ளிக்கூடத்தின் அருகில் கற்சிலைகள் இருப்பதாக அளித்த தகவலின்பேரில் ’சம்புவராயர் ஆய்வு மைய அறக்கட்டளை’ செயலாளர் முனைவர் அ. அமுல்ராஜ் மற்றும் வரலாற்று ஆய்வாளர் ஆர். விஜயன் ஆகியோர் இன்று (டிச. 2) கள ஆய்வில் ஈடுபட்டனர்.

  அப்போது பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் முன் இரண்டு நடுகற்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனர். அவை இரண்டும் கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நாயக்கர் கால நடுகல் என்றும் வேட்டை மற்றும் போரில் இறந்த வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்டவை என்றும் உறுதிசெய்தனர். இதுகுறித்து, முனைவர் அ. அமுல்ராஜ் கூறுகையில்,

  Also read:  ரிக்கி பாண்டிங்கின் இமாலய சாதனையை விராட் கோலி தகர்ப்பாரா?

  போரில் வீரம்காட்டி இறந்த வீரர்களுக்கும் வேட்டையில் உயிர்நீத்த மறவர்களுக்கும் நடுகல் எடுத்து வணங்குவது பழந்தமிழர் மரபு. இம்மரபு தமிழகத்தில் நாயக்கர் காலம் வரை நின்று நீடித்தது. பூசிமலைக்குப்பம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் இரண்டு நடுகற்கள் உள்ளன. இவை மக்களின் வழிபாட்டில் இன்றளவும் உள்ளது. இதுகுறித்து பூசிமலைக்குப்பம் கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ரத்தினம் ( வயது 70) அவர்கள், "இது வில் அம்பு வீரன் கல். எங்கள் ஊரில் ஆண் குழந்தை பிறந்தால் இந்த வீரர்கள் சிலைக்கு முன் கொண்டுவந்து படுக்கவைத்து குழந்தைகளும் வீரர்களாக வளர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார். அத்துடன் பொங்கல் திருவிழா நாட்களில் ஆநிரைகளை மடக்கிவிட்டு வரும் உள்ளூர் இளைஞர்கள் இந்த வீரர்களை வணங்கும் மரபு இன்றளவும் உள்ளதாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இவையாவும் பழந்தமிழர் வழிபாட்டின் எச்சங்களாகும்.

  சிமெண்ட் தரைமீது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு நடுகற்களில் இடதுபுறம் உள்ளது வேட்டையில் உயிர்நீத்த வீரன் ஒருவனுக்காக வைக்கப்பட்ட நடுகல் ஆகும். சுமார் 2 அடி அகலம் 3 அடி உயரம் கொண்ட பலகைக் கல்லில் வீரன் ஒருவன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தலையில் வலதுபுறமாக பெரிய கொண்டை காணப்படுகிறது. காதில் வட்டமான பூ போன்ற அணிகலன் மற்றும் கழுத்தில் கழுத்தணி காட்டப்பட்டுள்ளது. அகண்ட கண்கள், முறுக்கிய மீசையுடன் காணப்படும் வீரனின் கைகளில் முன்கை வளை, தோள் வளை உள்ளது. முதுகிற்கு பின்புறம் அம்பறா கூடு காணப்படுகிறது. இடது கையில் வில்லைத் தாங்கியுள்ள வீரன் வலது கையில் அம்மை இழுத்துவிடும் காட்சி மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருப்பது இந்நடுகல்லின் சிறப்பாகக் கருதலாம். இடுப்பிற்கு கீழே அரையாடையும் குறுவாளும் காணப்படுகிறது.

  Also read:  ஓமைக்ரான் வைரஸால் எந்தெந்த நாடுகளில் எத்தனை பேருக்கு பாதிப்பு?

  இதே இடத்தில் வலதுபுறம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மற்றொரு நடுகல், சதிகல் வகையைச் சார்ந்தது ஆகும். போரில் வீரமரணம் அடைந்த வீரனுடன் அவனது மனைவி உடன்கட்டை  ஏறியதன் பொருட்டு வைக்கப்பட்டது இந்த நடுகல் ஆகும். சுமார் 2 1/2 அடி அகலம், உயரத்தில் வடிக்கப்பட்டுள்ள இந்நடுகல்லில் வலதுபுறம் ஆணின் உருவமும் அவனுக்கு இடதுபுறமாக பெண்ணின் உருவமும் காணப்படுகிறது. ஆணின் தலையில் வலதுபுறம் சாய்ந்த கொண்டையும் பெண்ணின் தலையில் இடதுபுறம் சாய்ந்த கொண்டையும் உள்ளது. இருவரின் ,மார்பிலும் கழுத்து, மார்பு வரை நீண்ட கழுத்தணி காணப்படுகிறது. இருவரின் காதுகளிலும் தொங்கிய நிலையில் காதணி, கைகளில் முன்கை வளை, தோள்வளை உள்ளது. ஆணின் இடுப்பில் அரையாடையும் பெண்ணின் இடுப்பில் கணுங்கால் வரை நீண்ட ஆடையும் காணப்படுகிறது. ஆண் தனது வலது கையில் கீழ்நோக்கிய போர் வாளைத் தாங்கியுள்ளான். பெண்ணின் வலது கையில் கள்பானை உள்ளது. இருவரின் இடதுகைகளிலும் கிளியின் உருவம் காட்டப்பட்டுள்ளது. போர்க்களத்தில் வீரமரணம் அடைந்ததைக் குறிக்க கீழ்நோக்கிய வாளும் இருவரும் மோட்சம் என்னும் வானுலகை அடைந்தனர் என்பதைக் குறிக்க கிளியின் உருவமும் இந்த நடுகல்லில் காட்டப்பட்டுள்ளது மிகவும் சிறப்பிற்குரிய செய்தியாகும் என்று தெரிவித்தார்.

  வரலாற்று ஆய்வாளர் ஆர். விஜயன் கூறுகையில்,
  பூசிமலைக்குப்பம், முள்ளண்டிரம், கே. கே. தோப்பு என்றழைக்கப்படும் கொள்ளு கானா தோப்பு போன்ற பகுதிகள் விஜயநகர நாய்க்கர் காலத்தில் சிறப்புற்று இருந்துள்ளது, இதில் முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள பழமையான சிவனாலயம் நாய்க்கர் காலத்தைச் சார்ந்தது ஆகும். நாய்க்க அரசர்களுக்குப் பிறகு இப்பகுதிகள் யாவும் கி.பி. 17 ஆம் நூற்றாண்டளவில் ஆரணி ஜாகீர்தார்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. பூசிமலைக்குப்பத்தில் ஊருக்கு மேற்கில் உள்ள அரண்மனை ஜாகீர்களின் வரலாற்றை இன்றளவும் பறைசாற்றியபடி உள்ளது. எனவே, நாய்க்கர் காலத்தில் இறந்த போர்வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் என இதனைக் கருதமுடிகிறது. அத்துடன் இப்பகுதியில் நடுகல் கண்டறியப்படுவது இதுவே முதன்முறையாகும். மேலும் பாழடைந்துக் கிடக்கும் பூசிமலைக்குப்பம் ஜாகீர் அரண்மனையை சீரமைப்பு செய்து நினைவு சின்னமாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டால் இப்பகுதியில் காணப்படும் இதுபோன்ற பழந்தமிழர் வரலாற்றுத் தடயங்கள் அழியாமல் காக்கப்படும் என்றும் அவர் கோரிக்கை வைக்கின்றார்.

   ம.மோகன்ராஜ் - செய்தியாளர், ஆரணி 
  Published by:Arun
  First published:

  Tags: Archaeology, Archeological site, Thiruvannamalai

  அடுத்த செய்தி