சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்ற புறநகர் ரயிலின் மீது கற்களை வீசி தாக்கியும், ரயிலில் அரிவாளுடன் ஏறியும் இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இளைஞர்கள் விஜய் நடித்த பீட்ஸ் படத்திற்கு டிக்கெட் வாங்க நின்று இருந்தபோது அவர்களை கைது செய்த மீஞ்சூர் காவல்துறையினர், அவர்களை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது கீழே இருந்த இளைஞர்கள் சிலர் ரயில் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியுள்ளனர். தொடர்ந்து ரயிலில் ஏறிய இளைஞர்கள் கத்தி, அரிவாள் கொண்டு சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரயிலுக்குள் இளைஞர்கள் சிலரை கத்தியால் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அனைவரும் நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து மீஞ்சூர் காவல்துறையினர் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே அமைந்த கேகே சினிமா திரையரங்கில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் பட டிக்கெட் புக் செய்ய நின்றிருந்த இளைஞர்கள் 4பேரை பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Must Read : பீஸ்ட் ரிலீஸ் - ஒளிர்ந்த திரையரங்க வளாகம்... DJ நிகழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாக நடனம்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திங்கட்கிழமை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மீது சிலர் கற்களை வீசி தாக்கிய நிலையில், நேற்று அத்திப்பட்டு ரயில் நிலையத்திலும் ரயில் மீது கற்களை வீசியும், கத்தியுடன் ரயிலில் அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் புறநகர் ரயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : பார்த்தசாரதி, (திருவள்ளூர்) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.