திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடம் 7 மாதங்கள் ஆகியும் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்காததால் பிளாஸ்டிக் கூரையிலும், எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமலும் மாணவர்கள் கல்வி கற்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளி கட்டிடம் கட்டித்தர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வன்னிபாக்கம் கிராம ஊராட்சியில் அமைந்த ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கட்டிடம் பழுதடைந்ததால் அதனை கடந்த 7 மாதங்களுக்கு முன் புதிய கட்டிடம் கட்டுவதாக கூறி இடித்து அப்புறப்படுத்தினர்.
இதனிடையே ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வரும் 84 மாணவ மாணவியர்களின் நலன் கருதி பள்ளி வேப்பமர நிழலில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. மேலும் வன்னிபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் வீட்டின் அருகில் தற்காலிகமாக வகுப்புகள் நடந்துவந்துள்ளது. மேல்தளத்தில் பிளாஸ்டிக் பாலித்தீன் கூரை அமைத்து அங்கும் வகுப்புகள் நடைபெற்றுள்ளது. கல்வி பயிலும் மாணவ மாணவிகள் இறுக்கமான அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு பாடம் கற்க கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேசை நாற்காலி கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மாணவ-மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக தொகுதி உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரில் பள்ளிக்கூடம் இடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு தனது தொகுதி நிதி 20 லட்சம் செலவில் பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பாலித்தீன் கூரையால் ஆன தனியார் கட்டிடம்
எனினும் இடிக்கப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கு தற்போதே 7 மாதம் முடிந்த நிலையில் பள்ளி மாணவ மாணவியர் பயின்று வந்த மரத்தடிப் பள்ளி மற்றும் பாலித்தீன் கூரையால் ஆன தனியார் கட்டிடத்தில் போதிய இட வசதி இன்றி தவித்து வரும் மாணவர்களுக்கு புதிய பள்ளி கட்டிடம் கட்டும் வரை போதிய இடவசதி உள்ள வீட்டில் இதே கிராமத்தில் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றுள்ளனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்கத்தில் இருக்கும் பள்ளியில் சேர்த்து விடும்படி மாணவ மாணவியர்கள் பெற்றோர்களை வலியுறுத்தி வருவதாக கூறுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதே போன்று நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளின் பழுதடைந்து இடிக்கப்பட்டு உள்ளன. அவைகளில் முறையாக புதிய கட்டிடத்தை கட்டப்படாமல் மாணவ மாணவியர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உரிய முறையில் பழைய பள்ளி வகுப்பறை கட்டடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்களை அடிக்கல் நாட்டி மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
7 மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டு சென்றுள்ள சட்டமன்ற உறுப்பினர் புதிய பணிகளை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதிய பள்ளி கட்டிடம் கட்டும் வரையாவது இல்லம் தேடி கல்வித்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
செய்தியாளர் : பார்த்தசாரதி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.