திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, தொடக்கப்பள்ளி மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை பெற்றோர் சரமாரியாகத் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருத்தணி அருகே பள்ளிப்பட்டு தாலுகாவில் ஒரு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 55 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அதே பள்ளியில், பொதட்டூர்பேட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 46 வயதான ஜெயகோபி என்ற ஆசிரியர் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றார்
பெருந்தொற்றுத் தடைக்குப் பின்னர் பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட நிலையில் இவர் பள்ளி மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மாணவியருக்கு செல்போன் மற்றும் சாக்லேட் கொடுப்பது போல் நடித்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்திருக்கிறார்; மேலும் வெளியில் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியிருக்கிறார்
இதற்கிடையே பள்ளியில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் (GOOD TUCH, BAD TOUCH) பற்றி மாணவியருக்கு ஆசிரியைகள் பாடம் எடுத்தனர். அதுபற்றி விவரம் அறிந்த மாணவியர், ஆசிரியர் ஜெயகோபி அத்துமீறுவதாக பெற்றோரிடம் கூறி கதறி அழுதனர். ஆத்திரமடைந்த பெற்றோர் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரைக் கைது செய்யும்படி கோஷம் எழுப்பினர்
தகவல் அறிந்து வந்த பள்ளிப்பட்டு போலீசார் பள்ளிக்குள் சென்று விசாரணை நடத்தி ஆசிரியரைக் கைது செய்து அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது பெற்றோர் ஒன்று கூடி முற்றுகையிட்டு ஆசிரியர் ஜெயகோபியை சரமாரியாகத் தாக்கினர். போலீசார் அவர்களைத் தடுத்து ஜெயகோபியை மீட்டு தங்கள் இருசக்கர வாகனத்தில் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். ஜெயகோபி போன்ற ஆசிரியர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்: சிவக்குமார் - திருத்தணி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.