பூந்தமல்லி அருகே அரசுப் பள்ளி அருகில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்கக் கோரி சமீபத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மனு வழங்கிய கல்லூரி மாணவர்களை கஞ்சா விற்பதாக மர்ம நபர்கள் போலீஸ் என கூறி வீடு தேடி வந்து நள்ளிரவில் மிரட்டியதால் பரபரப்பு- மக்கள் திடீர் சாலை மறியல்.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட வயளாநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தங்கள் பகுதியில் மதுக்கடை இல்லாதபோதிலும் அரசு பள்ளிக்கு எதிரே 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதால் பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அசௌகரியமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு மனு ஒன்றை கொடுத்தனர். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாணவர்களின் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் தங்களை போலீசார் எனக்கூறி நீ தான் இந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்கிறாயே என மாணவர்கள் மீது அவதூறு கூறி மிரட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடிய போது மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்,
தங்கள் பகுதியில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் குண்டர்களை ஏவி மாணவர்கள் மிரட்டியதை கண்டித்து கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பூவிருந்தவல்லி பட்டாபிராம் சாலையில் சொக்கநல்லூர் சந்திப்பில் சாலையை மறித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாங்க படிக்கவா அல்லது குடிக்கவா என கோஷங்களை எழுப்பி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மாணவர்களை மிரட்டிய குண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெள்ளவேடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
மதுபானகடை இல்லாத கிராமத்தில்அரசு பள்ளி எதிரே 24 மணி நேரமும் தங்குதடையின்றி மது விற்பனை செய்வதால் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாவதாக புகார் தெரிவிக்கின்றனர். பல ஆண்டு பிரச்சினையான சட்டவிரோத மது விற்பனைக்கு கிராமசபை கூட்டத்தில் ஆவது புகார் அளித்தால் நடவடிக்கை கிடைக்கும் என எண்ணி மனு கொடுத்த கல்லூரி மாணவர்கள் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
செய்தியாளர்: சோமசுந்தரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Students, Thiruvallur