கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் பொன்னேரி அரசு மருத்துவமனை!

முன் மாதிரி அரசு மருத்துவமனை

சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு மட்டுமின்றி உடன் தங்கி இருப்பவர்களுக்கும் மனச்சுமையை போக்கி சோர்விலிருந்து அவர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக மருத்துவமனை வளாகத்திலேயே பறவைகளையும், வண்ண மீன்களையும் வளர்த்து வருகின்றனர்.

 • Share this:
  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது, இங்கு கடந்த வைரஸ் பெருந் தொற்று காலத்தின் போது 30 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட சிறப்பு வார்டில் ஏராளமானோர் வந்து தங்கி சிகிச்சை பெற்று சென்றனர்.

  இந்த நிலையில் தற்போது இரண்டாம் அலையின் தாக்கத்தினால் மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு வார்டை திறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. மாவட்டத்தில் மட்டுமின்றி   தமிழகத்திலேயே முன்மாதிரியாக எல்என்டி தனியார் துறைமுக நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனுரத்னா ஒரு மணி நேரத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி மையத்திற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.

  அந்நிறுவனம் ரூபாய் 2 கோடி செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை ஏற்படுத்தி தந்துள்ளது, இதே போன்று இங்கு சிகிச்சை பெறுவதற்காக வரும் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு உதவும் விதமாக சிறப்பு உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது, இதனை நிர்வகிக்க DYFI டெமோகிரெடிக் யூத் பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பினரை பயன்படுத்தி அவர்கள் மூலம் மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளில் உதவுவதில் தன்னார்வலர்களையும்  ஈடுபடுத்தி பொது மக்களுக்கு உதவி வருகின்றனர்.

  இம்மருத்துவமனையின் செயல்பாடு தெரிந்துகொண்ட தன்னார்வ அமைப்பினர் ஏராளமான உதவிகளை செய்ய முன்வந்துள்ளனர் உதாரணமாக தற்போது மருத்துவமனைக்கு 15 ஆக்ஸிஜன் படுக்கைகள் செய்து தந்துதவி உள்ளனர். மேலும் பல பணிகளை முன்னெடுத்துள்ளனர்.  மருத்துவமனைக்கு லயன்ஸ் கிளப் சார்பில் 15 படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இந்த மருத்துவமனையை தலைமை மருத்துவர் அனுரத்னா மேம்படுத்தி இங்கு சிகிச்சை பெற்றுவரும் கர்ப்பிணி பெண்களுக்கு மன உளைச்சலைப் போக்கும் விதமாக அவர்களுக்கு படிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தும் விதமாக நூலகம் ஒன்றை இந்த மருத்துவமனையில் ஏற்படுத்தி அதை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

  மேலும் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு மட்டுமின்றி உடன் தங்கி இருப்பவர்களுக்கும் மனச்சுமையை போக்கி சோர்விலிருந்து அவர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக மருத்துவமனை வளாகத்திலேயே பறவைகளையும், வண்ண மீன்களையும் வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.  இதுபோன்று நோயாளிகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள வரும் இடத்தில் வேண்டிய வசதிகளை மேம்படுத்துவதிலும் இந்த மருத்துவமனை முன்மாதிரியாக திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.

  திருவள்ளூர் செய்தியாளர் பார்த்தசாரதி
  Published by:Arun
  First published: