திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஜெகநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இனாம் அகரம் காலனியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு
அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உத்தரவில் 20 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட அந்த வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்து வசிப்பதற்கு பாதுகாப்பற்ற வீடாக மாறியது. இது குறித்து இங்கு வசிக்கும் மக்கள் தங்களது குழந்தைகள் அனைவரையும் வைத்துக்கொண்டு குறுகளான இந்த குடியிருப்பில் வசிக்க முடியவில்லை என்று 15 ஆண்டுகளாக பல முறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய வீடு கட்டித் தர வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இவர்களது குடியிருப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது ஆட்சியராக இருந்த முன்னாள் ஆட்சியர் வீரராகவ ராவ், இனாம் அகரம் கிராமத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு புதிய வீடுகளை கட்டித் தருவதாக உறுதியளித்தார். அதன் பின்னர் அவர் மாற்றலாகி சென்றதும் ஆட்சியராக வந்த மகேஸ்வரி அதேபோன்று 2017 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது வந்து இவர்கள் நிலையை பார்த்து பரிதாபப்பட்டார்.
மேலும் அதற்குப்பின் ஆட்சியராக திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்த பொன்னையா அவர்களிடமும் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சி யாளர்கள் இடமும் இவர்களது கோரிக்கை மட்டுமே சென்றடைந்தது. அதற்குப் பின் இப்பகுதியை பார்வையிட்டு பாதுகாப்பற்ற முறையில் இருந்த 3 வீடுகளையும் மட்டும் கட்டி தந்தனர். எஞ்சிய 17 தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடு கட்டப்படும் என்று கூறிய அதிகாரிகளின் வாக்குறுதி நிறைவேறாமலேயே போனது.
Also Read :
எண்ணூரில் நிலக்கரி கொண்டு செல்லும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
மேலும் இங்கு வசிக்கும் பட்டியலின மக்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என பாராளுமன்ற தேர்தல் சட்ட மன்ற தேர்தல் சமயங்களில் வாக்கு கேட்டு வந்த அனைவரும் வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்தனர். தற்போது வெற்றி பெற்று திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியின் எம்பியாக உள்ள காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ஜெயக்குமார் மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த பொன்னேரி தனி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் வெற்றி பெற்ற பின்னரும் இதுநாள் வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆபத்தான நிலையில் தொகுப்பு வீட்டின் மேல்தளத்தில் இருந்து சிமெண்ட் பெயர்ந்து விழும் குடியிருப்பில் ஆபத்தை பொருட்படுத்தாமல் வசித்து வருகின்றனர்.
அரசு தங்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த வீடுகளை இடித்துவிட்டு புதிதாக பாரத பிரதமரின் வீடுகளைக் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். தற்போது மாவட்ட ஆட்சியராக இருக்கும் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பட்டியலின மக்கள் படும் பாட்டை உணர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழும் இவர்களுக்கு புதிய தொகுப்பு வீடுகளை கட்டித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
செய்தியாளர் : பார்த்தசாரதி, திருவள்ளூர் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.