திருவள்ளூரில் ஆதரவற்றோர் காப்பகத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டன் கைது

பாலியல் வன்புணர்வு

திருவள்ளூர் அருகே தனியார் காப்பக விடுதியில் தங்கியிருந்த 7 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை வார்டன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
    திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் அருகில் உள்ள கசுவா கிராமத்தில் சேவாலயா தனியார் அறக்கட்டளை கடந்த 33 வருடங்களாக 12 ஏக்கர் நிலப் பரப்பளவில் இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையை சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

    முரளிதரனின் மனைவி புவனேஸ்வரி கௌரவத் தலைவராக இருந்து வருகிறார். கிராமத்தில் இயங்கி வரும் சேவாலயா தனியார் தொண்டு நிறுவன வளாகத்தில் மகாகவி பாரதியார் பள்ளி சேவாலயா சமுதாயக் கல்லூரி சுவாமி விவேகானந்தர் மாணவர் இல்லம், அன்னை தெரசா மாணவியர் இல்லம், மகாத்மா காந்தி மருத்துவ மையம், வினோபாஜி கோசாலை மையம் இயங்கி வருகின்றன. தனியார் காப்பகத்தில் தற்போது 65 ஆதரவற்ற மாணவர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் ஆணையை பெற்று பாதுகாப்பு பராமரிப்பு மற்றும் படிப்பிற்காக தங்கியுள்ளனர்.

    விவேகானந்தர் இல்லத்தின் தலைமை வார்டனாக கடந்த 6 வருடமாக கிருஷ்ணசாமி 46 வயது என்பவர் உள்ளார். இவர் ஸ்ரீ வில்லிபுத்தூர் முள்ளிக்குளம் மல்லி கிராமம் பகுதியை சேர்ந்தவர். இவர் சுவாமி விவேகானந்தா ஆதரவற்றோர் காப்பக விடுதிக்கு வார்டனாக வெங்கட்ராமன் என்பவரை புதியதாக சேர்ந்தார்.

    இதனிடையே வெங்கட்ராமனிடம் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தலைமை வார்டன் கிருஷ்ணசாமி தங்களை அடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். இந்த தகவலை அறக்கட்டளையின் தலைமைக்கு வெங்கட்ராமன் தெரியப்படுத்தினார்.

    இதனடிப்படையில் கௌரவத் தலைவர் புவனேஸ்வரி கடந்த 9. 8.2021 அன்று சுவாமி விவேகானந்தர் மாணவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை செய்தபோது தலைமை வார்டன் கிருஷ்ணசாமி அங்கு தங்கியிருந்த மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவதும் பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக தெரிய வந்ததுடன் உடனடியாக கிருஷ்ணசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அந்த வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    இது சம்பந்தமாக டாக்டர் கோகுலகிருஷ்ணன் கசுவா சேவாலய தலைவர் ஆனந்தன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கரபாண்டியன் ஆகிய மூவர் அடங்கிய குழு அமைத்து விசாரணை செய்தனர். அக் குழுவிடம் 14 முதல் 17 வயதிற்குட்பட்ட சுமார் 7 மாணவர்களை தலைமை வார்டன் கிருஷ்ணசாமி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக எழுத்து மூலம் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் கடந்த 26ஆம் தேதி அன்று சேவாலயாவின் துணைத்தலைவர் கிங்ஸ்டன் 45 ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் ஊத்துக்கோட்டை மகளிர் காவல் போலீசார் போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் காப்பகத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரது உத்தரவில் ஏடிஎஸ்பி மீனாட்சி, பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி உள்ளிட்ட காவல்துறையினர் மாணவர் இல்லத்திற்குச் சென்று நேரடியாக தங்கியிருந்த மாணவர்களிடம் விசாரணை செய்ததில் விடுதியின் தலைமை வார்டன் கிருஷ்ணசாமி அங்கு தங்கியிருந்த 14 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களை அவர்களின் அனுமதி இல்லாமல் கன்னத்தில் கிள்ளுவது, உதட்டில் முத்தம் கொடுப்பது என இரவு நேரங்களில் அவர்களது அறைக்கு அழைத்து கிருஷ்ணசாமியின் கால்களை பிடித்து விடும்படி கட்டாயப்படுத்துவது அப்படி பிடித்துவிடும் மாணவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் உடன்படாத மாணவர்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும் மாணவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து இந்த சம்பவம் உண்மை என தெரிய வந்ததால் சிறுவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்துவந்த தலைமை வார்டன் கிருஷ்ணசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை நீதிபதி காவலில் வருகிற 26-ஆம் தேதி வரை வைக்க உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் சிறுவர்களிடம் தவறாக நடந்துகொண்ட கிருஷ்ணசாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published: