பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா போன்றவர்களுக்கு ஆளுநர் ஆகும் தகுதி உள்ளதா என கேள்வி எழுப்பிய துரை வைகோ, ஹெச்.ராஜாவை போன்றவர்கள் ஆளுநரானால் அவர்கள் நியமிக்கும் துணைவேந்தர்களும் பாஜகவைச் சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள் என விமர்சித்தார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக ஆவடி மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருவள்ளுர் மாவட்டம் ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் பணிச்செயலாளர் ஆவடி அந்தரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதிமுகவின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளிடம் துரைவைகோ விரிவாக பேசினார். செயல்வீரர்கள் கூட்டத்திற்கு முன்பாக மக்கள் நீதி மையம் கட்சியிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் மதிமுகவில் இணைந்தனர். அதேபோல் தேமுதிக, அமமுக, பாஜக, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்த பலர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் துரை வைகோ முன்னிலையில் இணைந்தனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “ கழக வளர்ச்சி பணிகள் கழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்தோம். அதேபோல் கழக அமைப்பு தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் அது குறித்தான பணிகள் குறித்து இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆலோசித்தோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிகாலை 3 மணிக்கு தேர் விபத்து.. 5 மணிக்கே தொடர்புகொண்ட முதல்வர்: அமைச்சர் அன்பில் மகேஷ்
தொடர்ந்து பேசிய அவர், பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமித்துக் கொள்ளலாம் என்கிற சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ள தமிழக அரசின் செயல் வரவேற்கத்தக்கது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகளே பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்கின்றனர். அதேபோல் தமிழகத்திலும் துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்கும் என்பது வரவேற்புக்குரியது என்று கூறினார்.
மேலும் படிக்க: 15 ஆண்டுகாலமாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்... மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள் - சேலத்தில் அவலம்
அதேபோல், “ பாஜகவைச் சார்ந்த ஹெச்.ராஜா ஆளுநர் ஆவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளவர் என அண்ணாமலை கூறியிருப்பது ஏற்கத்தக்கதா .அவருக்கு ஆளுநர் ஆவதற்கான தகுதி உள்ளதா” என கேள்வி எழுப்பிய துரை வைகோ, அப்படி ஹெச்.ராஜா போன்றவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால் அவர்களைப் போன்றவர்கள் துணைவேந்தரை நியமிக்கும் போது அவர்கள் பாஜகவை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள்,எனவே தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை துணைவேந்தர் களை நியமிக்க வேண்டும் என கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.